Skip to main content

''இந்தி கத்துக்கோ என்று சொல்கிறார்கள்...''-ஸ்விகி ஊழியர்கள் வேதனை! 

Published on 22/09/2022 | Edited on 22/09/2022

 

Swiggy employees are in agony!

 

ஸ்விகி நிறுவனத்தின் புதிய நடைமுறைகளுக்கு எதிராக சென்னையைச் சேர்ந்த ஸ்விகி ஊழியர்கள் கடந்த 19 ஆம் தேதியே போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்பொழுது வரை போராட்டமானது நடந்து வருகிறது.

 

ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விகியில் சில புதிய நடைமுறைகளை அந்நிறுவனம் கொண்டுவந்துள்ளது. அதன்படி எவ்வளவு டெலிவெரிகளை கொடுத்தாலும் குறிப்பிட்ட அளவு மட்டுமே ஊதியம் வழங்கப்படும் என்ற நடைமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஸ்விகி ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில், பழைய நடைமுறையான ஊக்கத்தொகை, ஊதியம்  ஆகியவற்றை தொடர வேண்டும் என வலியுறுத்தி சென்னையில் பணிபுரிந்து வரும் ஸ்விகி ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

இன்று தாம்பரம் கிழக்கு மற்றும் மேற்கு ஸ்விகி ஊழியர்கள் சார்பில் போராட்டம் நடைபெற்றது. சேப்பாக்கத்தில் நடந்த இந்த போராட்டத்தில் ஸ்விகி ஊழியர்கள் பலர் கலந்துகொண்டனர். போராட்டம் குறித்து ஸ்விகி ஊழியர் ஒருவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டியளிக்கையில், ''எங்களை ஒரு கேள்வி கூட கேட்காமல் ஸ்லாட்டையே (SLOT) மாத்திட்டாங்க. இதனால் வாரம் ஒன்றிற்கு எங்களுக்கு 4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. அப்போ நாங்க எப்படி குடும்பத்தை நடத்த முடியும்.  மழைபெய்தால் 'ரெயின் மோட்' எனபோட்டு 15 ரூபாய் தருவார்கள். அதை இப்பொழுது 10 ரூபாயாக குறைத்து விட்டார்கள். அதையும் வாடிக்கையாளரிடம் பெற்றுத்தான் தருகிறார்கள். திராவிட  மாடல் ஆட்சி தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கு மேலாக திராவிட ஆட்சிதான் நடக்கிறது. இங்க வேலை செய்கிற ஆட்களுக்கு தமிழ்தான் தெரியும்.

 

ஆனால் கஸ்டமர் கேரில் பேசினால் இந்தி தெரியுமா? இங்கிலீஸ் தெரியுமா? தெலுங்கு தெரியுமா? என கேட்கிறார்கள். இந்தி தெரிந்தால் மட்டுமே நாங்கள் பதில் சொல்வோம் என்பது மாதிரி இருக்கிறது. இதிலிருந்து இந்தி கத்துக்கோ என்று சொல்கிறான். நாங்க இந்தியிலேயோ, இங்கிலீஸ்லயோ பேச மாட்டோம் தமிழில்தான் பேசுவோம். விருப்பம் இருந்தா தமிழ்ல பேசு. முதலில் 12 மணி நேரம் வேலை செய்வோம் இப்போ 16 மணி நேரம் வேலை செய்ய சொல்றான். 16 மணிநேரம் வேலை செய்தாலும் 7 ஆயிரம் ரூபாய்தான் கிடைக்கும். அதில் 3 ஆயிரம் முதல் 3,500 ரூபாய் பெட்ரோலுக்கே போயிடும். இதை வெச்சு எப்படி நாங்க குடும்பம் நடத்துவோம்'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்