சென்னை மோட்டார் வாகன வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் 55 வழக்கு ஆவணங்கள் காணாமல் போனது குறித்து சிபிசிஐடி விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இன்சூரன்ஸ் மோசடி தொடர்பான வழக்கு ஒன்று நீதிபதி பி.என்.பிரகாஷ் முன்பு விசாரணைக்கு வந்தபோது, " சென்னை மோட்டார் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் இருந்து தன்னுடைய 55 வழக்கு ஆவணங்கள் மாயமானது குறித்து வழக்கறிஞர் தம்பி என்பவர் சிறு வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்ற பதிவாளரிடம் புகார் கொடுத்துள்ளதை சுட்டி காட்டினார். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக பதிவாளர் உயர்நீதிமன்ற காவல் நிலையத்தில் கொடுத்த புகார் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை எனவும் நீதிபதி தெரிவித்தார்.
வழக்கறிஞர்களின் தொழில் போட்டி காரணமாகவே ஆவணங்கள் மாயமாவதாக சுட்டிக்காட்டிய நீதிபதி, இந்த புகார் மீதான விசாரணையை சிபிசிஐடி'க்கு மாற்றி உத்தரவிட்டார். மேலும், இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை 2 வாரங்களில் சிபிசிஐடி எஸ்.பி'யிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் உயர் நீதிமன்ற காவல் ஆய்வாளருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.