பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறு கருத்து வெளியிட்ட வழக்கில் எஸ்.வி.சேகரின் முன்ஜாமின் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
பெண் பத்திரிகையாளர் குறித்து எஸ்.வி.சேகர் தனது முகநூல் பதிவில் அவதூறு கருத்தை பதிவிட்டிருந்தார். இதுதொடர்பாக பத்திரிகையாளர்கள் நலச் சங்கம் அளித்த புகாரின் அடிப்படையில் எஸ்.வி.சேகர் மீது காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து கைது நடவடிக்கைக்கு அஞ்சிய எஸ்.வி.சேகர் தலைமறைவானார்.
இதனையடுத்து எஸ்.வி.சேகர் முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். அதேசமயம் எஸ்.வி.சேகருக்கு முன் ஜாமீன் வழங்க ஆட்சேபம் தெரிவித்து பத்திரிகையாளர்கள் பலரும் இடையீட்டு மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, இதேபோன்ற குற்றச்சாட்டு மற்ற பொதுமக்களுக்கு எதிராக வரும் போது எடுக்கப்படும் நடவடிக்கைக்கும், எஸ்.வி.சேகர் மீதான புகாருக்கும் பாரபட்சம் காட்டப்படுகிறதோ என்று நீதிபதி எஸ்.ராமத்திலகம் கேள்வி எழுப்பினார். ஊடகத்தினர் கைது செய்யப்படும்போது, சேகர் மட்டும் ஏன் வேறு விதமாக கையாளப்படுகிறார் என்று கேள்வி எழுப்பிய நீதிபதி, தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தார்.
இந்நிலையில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி, எஸ்.வி.சேகரின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும், மற்ற வழக்குகளை விசாரிப்பது போலவே எஸ்.வி.சேகருக்கு எதிரான வழக்கையும் காவல்துறை விசாரிக்க வேண்டும் என உத்தரவிட்டார். முன்ஜாமீன் மறுக்கப்பட்டதால் எஸ்.வி.சேகர் எந்த நேரமும் கைது செய்யப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.