புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பையன். இவர் நெடுவாசல் வடக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக இருந்த போது அப்பகுதி மாணவர்களுக்கு சத்துக்குறைபாடு உள்ளதாக மருத்துவர்கள் சொன்னதன்பேரில் அமெரிக்காவில் பணியில் உள்ள இளைஞர்களின் 'ஒரு நாளைக்கு ஒரு டாலர்' திட்டத்தின் கீழ் கிராமப்புற ஏழை மாணவர்களுக்கு காலை உணவு திட்டத்தை அப்போதைய மாவட்ட ஆட்சியர் சுகந்தியை அழைத்து தொடங்கினார். சிறிது காலத்தில் திட்டம் கைவிடப்பட்டது. தொடர்ந்து பொதுத்துறை நிறுவனங்களின் உதவியுடன் சில பள்ளிகளுக்கு சில பணிகளையும் செய்துள்ளார்.
இந்த நிலையில் மாநில நல்லாசிரியர் விருது பெற்று 2010 ம் ஆண்டு தேசிய நல்லாசிரியர் விருதும் பெற்றார். அதன் பிறகு பனங்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியராக பணி செய்து கடந்த 2022 ஜனவரி 27 ந் தேதி நிர்வாக மாறுதலில் ஆலங்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியராக ஜனவரி 31 வரை பணியில் உள்ளார்.
இந்த நிலையில் தான் தலைமை ஆசிரியர் கருப்பையன் 2015 ம் ஆண்டு புதுக்கோட்டை மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி வடகாடு கிளையில் கடன் பெற்று திரும்பச் செலுத்தவில்லை என்று வங்கி மேலாளர், திருவரங்குளம் வட்டாரக் கல்வி அலுவலரிடம் புகார் அளித்த நிலையில் இது பற்றிய விசாரணையில் வங்கியில் கடன் பெற கொடுக்கப்பட்டுள்ள ஆவணங்கள் போலியாக தயாரிக்கப்பட்டது என்றும் போலி முத்திரைகள், உயர் அதிகாரிகளின் கையெழுத்து போலியாக போடப்பட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது.
மேலும் பள்ளியில் புரவலர் நிதியை சரியாக கையாளவில்லை என்றும் எழுந்த பல புகார்கள் குறித்தும் கல்வித்துறை அதிகாரிகள் விளக்கம் கேட்ட போது விளக்கமளிக்கவில்லை என்ற நிலையில் குற்றச்சாட்டுகள் குறித்து அறந்தாங்கி மாவட்டக் கல்வி அலுவலர்(தொடக்கக்கல்வி) சண்முகம் முன் கடந்த 22 ந் தேதி நேரில் விசாரணைக்கு சென்றும் சரியான விளக்கம் கிடைக்கப் பெறாததால், கருப்பையனை, மாவட்டக் கல்வி அலுவலர் பிப்ரவரி 2 ந் தேதி முதல் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
பணியிடைநீக்க உத்தரவை தலைமை ஆசிரியர் கருப்பையன் வாங்காததால் வருவாய்த் துறையினர், கல்வித்துறை அலுவலர்கள் பள்ளி சுவற்றில் ஒட்டிச் சென்றுள்ளனர். தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற தலைமை ஆசிரியர் கருப்பையன் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.