10 ஆண்டுகளுக்கு முன்பு மத்திய மண்டல ஐஜியாக இருந்த ஜாபர்சேட். ரவுடிகளை ஒடுக்குவதற்காகவே 'டெல்டா ஃபோர்ஸ்' என்ற தனிப்படையை வைத்திருந்தார். திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கரூர், தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் அட்ராசிட்டி பண்ணும் ரவுடிகளை நள்ளிரவில் வீடுபுகுந்து இந்த படை தூக்கும். பக்கத்து மாவட்டத்திற்கு கொண்டு சென்று துவைத்து எடுத்து, கைகட்டு போட்டு நிலுவையில் உள்ள வழக்குகளில் சிறையில் தள்ளும் இந்தபடை.
அதாவது சம்பந்தப்பட்ட ரவுடி ஜாமினில் வெளியே வந்தாலும், தண்டனை காலம் முடிந்து வந்தாலும் மேற்கொண்டு ஆக்டிவாக இருக்க முடியாத அளவுக்கு 'கைகட்டு' போட்டு அனுப்பும் இந்தபடை.! இதற்கு பெயர் 'பட்டி பார்த்தல்' என்று தனிப்படை போலீஸார் சொல்வார்கள்.
இந்த பாணியை சென்னை போலீஸாரும் இப்போது பின்பற்றத் தொடங்கி விட்டனர். கடந்த 23-ந்தேதி சென்னையில் தேனாம்பேட்டை, ஐஸ்ஸவுஸ், ராயப்பேட்டை, கோட்டூர்புரம், மயிலாப்பூர் என 5 இடங்களில் மர்மநபர்கள் 2 பேர், டூவீலரில் சென்று பெண்களிடம் வழிப்பறியில் ஈடுபட்டனர். சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் மூலம் துப்புதுலக்கிய தனிப்படை போலீஸார், கொள்ளையர்களில் ஒருவனான ராகேஷை 48 மணிநேரத்தில் கைது செய்தனர். அவனுக்கு 'கைகட்டு' போட்டு சிறைக்கு அனுப்பிய போலீஸார், கூட்டாளி சீனுவை தேடி வருகின்றனர்.
இதேபோல், 25-ந்தேதி அதிகாலை நீலாங்கரை அருகே சொகுசுகாரில் வந்து விபத்தினை ஏற்படுத்திவிட்டு, மதுபோதையில் போலீஸாரிடம் தகராறு செய்த நவீன் என்ற இளைஞருக்கும் மாவுக்கட்டு போட்டு சிறையில் தள்ளியிருக்கிறது சிட்டி போலீஸ். மதுபோதையில் கொஞ்சம் ஓவராகவே நடந்து கொண்டதால், இவருக்கு போலீஸார் தங்களது பாணியில் விருந்து வைத்து அனுப்பி இருக்கின்றனர்.
'எவன் ஆட்டம் போட்டாலும் பட்டி பார்த்து அனுப்புங்கள், கொஞ்சம் ஓவரா ஆடுனால் போட்டுத் தள்ளுங்கள்' என்று மேலதிகாரி வாய்மொழி உத்தரவு போட்டிருக்காராம். அதனால் தான் இப்போது பட்டி பார்த்தலை போலீஸார் தொடங்கி இருக்கின்றனர்.