பேருந்துப் பயண வசூல் குறைந்தது குறித்து கேள்வி எழுப்பியதால், அரசுப் போக்குவரத்துக் கழக உதவி மேலாளரும், பேருந்து நடத்துநரும் பொது வெளியில் கடுமையாக மோதிக்கொண்ட சம்பவத்தை அடுத்து இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
சேலம் பேருந்து நிலையத்தில் இருந்து கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு ஏப்.15 ஆம் தேதி அரசுப் பேருந்து வந்தது. அங்கு சேலம் கோட்ட உதவி மேலாளர் ஷாஜகான் பணியில் இருந்தார். பேருந்து கோயம்பேட்டிற்கு வந்து சேர்ந்ததும் பேருந்து நடத்துநர் செல்லத்துரை, உதவி மேலாளர் ஷாஜகானிடம் கையெழுத்துப் பெறுவதற்காகச் சென்றார். அப்போது ஷாஜகான், ''பேருந்து கட்டண வசூல் தொகை குறைவாக உள்ளதே ஏன்?'' என்று கேட்டுள்ளார். இதனால் அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
உதவி மேலாளர் கோபத்தில் திட்டுவதை செல்லத்துரை தனது அலைப்பேசியில் காணொளியாக பதிவு செய்துள்ளார். இதைப் பார்த்து மேலும் ஆத்திரம் அடைந்த ஷாஜகான், அவரைத் தாக்க முயன்றுள்ளார். இதை சற்றும் எதிர்பாராத செல்லத்துரை, அவரிடம் மேலும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் இருவருமே ஒருவரை ஒருவர் தாக்கி ஆபாச வார்த்தைகளால் வசைபாடிக் கொண்டனர்.
பணி நேரத்தில், அரசுப் போக்குவரத்துத்துறை உயர் அலுவலரும், நடத்துநரும் பொது வெளியில் தகராறில் ஈடுபட்டதால் அங்கு வந்த பயணிகளும் அவர்களைப் பார்த்து கடுமையாக விமர்சித்தனர். சில பயணிகள், அவர்கள் சண்டையிட்டுக் கொள்வதை அலைப்பேசியில் காணொளியாக பதிவு செய்து சமூக ஊடகங்களில் பகிர்ந்தனர். பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து சேலம் கோட்ட அரசுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர், உதவி மேலாளர் ஷாஜகான், நடத்துநர் செல்லத்துரை ஆகியோரிடம் நேரில் விசாரணை நடத்தினார். அவர்கள் அளித்த விளக்கத்தில் திருப்தி இல்லாததை அடுத்து இருவரையும், மேலாண் இயக்குநர் அதிரடியாக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். இந்த சம்பவம் அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.