திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே இருக்கும் விராலிப்பட்டி, எழுவனம்பட்டி, பூவம்பட்டி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் தண்ணீர் ஆதாரம் இல்லாமல் தரிசாக கிடக்கின்றன.
இதனால் இப்பகுதியில் விவசாயம் செழிக்கவும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பெருக்கவும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் தேனி மாவட்டம் சோத்துப்பாறை அணையிலிருந்து வத்தலகுண்டு மற்றும் அதைசுற்றியுள்ள கிராமப் பகுதிகளுக்கு புதிய கால்வாய் வெட்டி தண்ணீர் கொண்டு வர வலியுறுத்தி அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் பேரணி நடைபெற்றது. அதுபோல் விளைபொருளுக்கு ஆதார விலை, பெட்ரோல், டீசல் விலை குறைப்பு, மின்கட்டண உயர்வை ரத்து செய்யும் நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு பதாகைகள் பேரணியில் எடுத்துச் செல்லப்பட்டன. இதில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் ஏராளமானோர் பங்கேற்றனர். பேரணி முடிவில் சங்கம் மாநில தலைவர் போஸ் தலைமையில் நடந்த மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.