![vb](http://image.nakkheeran.in/cdn/farfuture/FyrDjHPE5MiI-9qgr2kr8QXA_rAFVGp1DX0MM-vjM6U/1603990072/sites/default/files/inline-images/465_3.jpg)
நுகர்வோரிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பதைத் தடுக்க, கேஸ் ஏஜென்சிகளில் திடீர் சோதனை நடத்த வேண்டும் என, எண்ணெய் நிறுவனங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சமையல் எரிவாயு சிலிண்டர்கள் டெலிவரி செய்ய கூடுதல் கட்டணம் வசூலிக்கும் கேஸ் ஏஜென்சிக்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, சென்னை அன்னனூரைச் சேர்ந்த லோகரங்கன் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், சிலிண்டர் டெலிவரி செய்வதற்காக கேஸ் ஏஜென்சிகளுக்கு டெலிவரி கட்டணம் வழங்கப்படும் நிலையில், இந்தத் தொகையை சிலிண்டர்களை டெலிவரி செய்யும் நபர்களுக்கு வழங்காமல், ஏஜென்சிகளே எடுத்துக் கொள்கிறது. மேலும், டெலிவரிக்காக நுகர்வோரிடம் கட்டணம் வசூலிக்கும்படி, டெலிவரி செய்யும் நபர்கள் நிர்பந்திக்கப்படுகின்றனர். இந்த வகையில், பொதுமக்களின் பணம் 500 கோடி ரூபாய்க்கு மேல் சுரண்டப்படுகிறது. இதைத் தவிர்க்க டெலிவரி செய்யும் நபர்களுக்கு சீருடை மற்றும் அடையாள அட்டைகள் வழங்கி, அவர்களின் பணியை வரன்முறை செய்ய வேண்டும் எனக் கோரியிருந்தார். இந்த வழக்கு மீண்டும் நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, சமையல் எரிவாயு வினியோக உரிமை ஒப்பந்தம் செய்யும் போதே, பல்வேறு விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும், அதன்படி, சமையல் எரிவாயு சிலிண்டர்களை வினியோகிக்கும் போது கூடுதல் கட்டணம் வசூலித்தால், சம்பந்தப்பட்ட வினியோக நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்படும் எனவும், தொடர்ந்து இந்த முறைகேடுகளில் ஈடுபட்டால் சம்பந்தப்பட்ட கேஸ் ஏஜெனைகளின் உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் எண்ணைய் நிறுவனங்கள் சார்பில் விளக்கமளிக்கப்பட்டது. இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், நுகர்வோர்களின் புகார்களை மட்டும் எதிர்பார்க்காமல், கேஸ் ஏஜென்சிகளில் திடீர் சோதனைகள் மேற்கொள்ள வேண்டும் என எண்ணெய் நிறுவனங்களுக்கு உத்தரவிட்டனர். மேலும், இதுவரை நுகர்வோர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலித்ததாக கேஸ் ஏஜென்சிகள் மீது கொடுக்கப்பட்ட புகார்கள் குறித்தும், புகார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், ஜனவரி 8- ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய எண்ணெய் நிறுவனங்களுக்கு உத்தரவிட்டனர்.