ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளன. இந்த நிலையில் ஈரோட்டில் அமைச்சர் முத்துசாமி இன்று (02.02.2023) செய்தியாளர்களிடம் பேசும்போது, "ஈரோடு கிழக்கு தொகுதியில் முன்பு எம்எல்ஏவாக இருந்த திருமகன் ஈவெரா பொதுமக்களிடமும், தொகுதி மக்களிடமும் நெருக்கமாக இருந்து வந்துள்ளார். அவர் மக்களிடம் பழகும் விதம் அணுகும் விதம் அமைதியாக இருக்கும். குறுகிய காலத்தில் ஈரோடு கிழக்கு தொகுதியில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை அவர் மேற்கொண்டார். திடீரென அவர் காலமானதைத் தொடர்ந்து இந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
இங்கு அவரது தந்தையான இளங்கோவன் திமுக கூட்டணியில் வேட்பாளராக நிற்கிறார். இந்த நிலையில், நாங்கள் கடந்த 12 நாட்களாக வாக்கு சேகரிக்கும் போது பெண்கள் மிகவும் துயரத்துடன் திருமகன் மறைவை கூறி வேதனைப்பட்டு எங்கள் ஓட்டு உங்களுக்கு தான் என்று கூறி வருகின்றனர். திருமகன் ஈவெரா நடவடிக்கையை முதலமைச்சர் சட்டசபையில் நன்கு கவனித்து வந்துள்ளார். இந்நிலையில் அவர் இறந்த செய்தியைக் கேட்டு அதிர்ச்சியடைந்த முதலமைச்சர் உடனடியாக அன்று இரவு ஈரோட்டுக்கு கிளம்பி வந்தார். மறுநாள் எனக்கு போன் செய்து திருமகன் நினைவாக நாம் ஏதாவது செய்ய வேண்டும் என்று கூறினார். அப்போது திருமகன் ஈவெரா வசித்த கச்சேரி வீதியை திருமகன் ஈவெரா வீதி என்று பெயர் மாற்றினார்.
நாங்கள் நிச்சயமாக இடைத்தேர்தலில் வெற்றி பெறுவோம். 3ம் தேதி வெள்ளிக்கிழமை திமுக கூட்டணி சார்பில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார். தேர்தல் பிரச்சாரத்திற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி, கனிமொழி ஆகியோர் ஈரோட்டுக்கு வருகை தர உள்ளனர். அதற்கான அட்டவணை தயாராகி வருகிறது."என்றார்.
பேட்டியின் போது அமைச்சர்கள் கே.என்.நேரு, நாசர், அன்பில் மகேஷ் பொய்யாமொழி உட்பட பலர் உடன் இருந்தனர்.