தமிழக அரசு, மத்திய அரசுக்கு எதிராக அனைவரையும் ஒருங்கிணைத்து பெரும் போராட்டத்திற்கு திட்டமிட வேண்டும். இது குறித்து விவாதிக்க அவசரமாக அனைத்துக் கட்சி, அனைத்து விவசாய சங்க தலைவர்கள் கூட்டத்தை நடத்திட தமிழக அரசு முன்வர வேண்டுமென்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்துகிறது.
காவிரி தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் பிப்ரவரி 16ந் தேதி தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பை ஆறு வார காலத்திற்குள் நிறைவேற்ற வேண்டுமென்று கெடு விதித்தது. மார்ச்-29ந் தேதி வரை தீர்ப்பை அமல்படுத்த மத்திய அரசு உருப்படியான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தன்னுடைய அரசியல் சுயலாபத்திற்காக மத்திய பி.ஜே.பி அரசு உச்சநீதிமன்ற தீர்ப்பை கடுகளவும் மதிக்கவில்லை. மத்திய அரசின் இந்த அலட்சியம் தமிழகத்திற்கு பெரும் பாதகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இது மத்திய பி.ஜே.பியின் தமிழகத்திற்கு விரோதமான போக்கையே வெளிப்படுத்துகிறது. கெடுவிதித்த காலத்திற்குள் மத்திய அரசு தீர்ப்பை அமல்படுத்தாத நிலையில், உச்சநீதிமன்றம் அடுத்து என்ன செய்யப் போகிறது என்பது பெரும் கேள்வியாக இருக்கிறது.
பல்வேறு வழக்குகளில் தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்யும் உச்சநீதிமன்றம், தன்னுடைய தீர்ப்பை மத்திய அரசே அமல்படுத்தாமல் அலட்சியப்படுத்தியுள்ள நிலையில் உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து இந்தப் பிரச்சனையில் தலையிட்டு தமிழகத்திற்கு நியாயம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தமிழக விவசாயிகள் எதிர்பார்க்கிறார்கள்.
மத்திய அரசோ, தமிழக அரசோ நீதிமன்றத்திற்கு சென்றால் மேலும் பல மாதங்களுக்கு காவிரி பிரச்சனை நீதிமன்ற வழக்குகளில் சிக்கி கிடப்பிலே போடவே உதவி செய்யும் என்பதை சுட்டிக்காட்டுகிறோம். இதனால், இந்த ஆண்டும் தமிழகத்திற்கு உரிய தண்ணீர் கிடைக்காமல் காவிரி டெல்டா விவசாயம் தொடர்ந்து பாதிக்கப்படும் நிலைமை ஏற்படும். இந்த நிலையில், தமிழக அரசு, மத்திய அரசுக்கு எதிராக அனைவரையும் ஒருங்கிணைத்து பெரும் போராட்டத்திற்கு திட்டமிட வேண்டும். இது குறித்து விவாதிக்க அவசரமாக அனைத்துக் கட்சி, அனைத்து விவசாய சங்க தலைவர்கள் கூட்டத்தை நடத்திட தமிழக அரசு முன்வர வேண்டுமென்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்துகிறது. ’’