சந்தைக்கு வரத்து குறைந்ததை அடுத்து, சேலத்தில் தேங்காய் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.
அன்றாட சமையலில் தவிர்க்க முடிய உணவுப்பொருளாக தேங்காய் இடம் பிடித்துள்ளது. தின்பண்டங்கள், எண்ணெய் தயாரிப்பிலும் தேங்காய் முக்கிய மூலப்பொருளாக உள்ளது. கடந்த ஆண்டு மழைப்பொழிவு நன்றாக இருந்ததால், தேங்காய் விளைச்சலும் அதிகரித்தது. அதனால் ஆண்டின் இறுதியில் தேங்காய் விலை கணிசமாக குறைந்து இருந்தது. இந்நிலையில் கடந்த இரண்டு நாள்களாக தேங்காய் விலை கிலோவுக்கு 6 ரூபாய் வரை அதிகரித்துள்ளது.
சேலம் சந்தைகளுக்கு கோவை, பெருந்துறை, கர்நாடகா மாநிலம் மைசூரு, மாண்டியா ஆகிய ஊர்களில் இருந்து தேங்காய் விற்பனைக்கு வரவழைக்கப்படுகிறது. ஆனால் கடந்த சில நாள்களாக சந்தைக்கு தேங்காய் வரத்து வெகுவாக சரிந்துள்ளது.
மொத்த வியாபாரத்திற்குப் பெயர் பெற்ற சேலம் செவ்வாய்ப்பேட்டையில் கடந்த வாரம் வரை தேங்காய் ஒரு கிலோ மொத்த விலையில் 34 ரூபாய் முதல் 36 ரூபாய் வரை விற்பனை ஆனது. ஆனால், கடந்த இரு நாள்களாக இதன் விலை கிலோவுக்கு 6 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. தற்போது ஒரு கிலோ தேங்காய் 40 முதல் 45 ரூபாய் வரை விற்பனை ஆகிறது. சிறிய அளவிலான தேங்காய் 12 ரூபாய்க்கும், ஓரளவு நடுத்தரம் மற்றும் பெரிய அளவிலான தேங்காய் 15 ரூபாய் முதல் 30 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
''சேலம் சந்தைகளில் தேங்காயின் தேவையை பொள்ளாச்சி, கோபிசெட்டிப்பாளையம், கவுந்தப்பாடி, பெருந்துறை ஆகிய பகுதிகள்தான் பெருமளவில் பூர்த்தி செய்து வந்தன. தற்போது அப்பகுதிகளில் இருந்து வரத்து குறைந்துள்ளது. அதனால் கர்நாடகா மாநிலம் மாண்டியாவில் இருந்து தேங்காய் கொள்முதல் செய்து சேலத்திற்குக் கொண்டு வருகிறது. வரத்து குறைவு மற்றும் போக்குவரத்து செலவுகள் காரணமாக விலை சற்று உயர்ந்துள்ளது. அடுத்து வரும் காலங்களில் வறட்சி காலம் என்பதால் தேங்காய் விளைச்சலும் குறையும். அதனால் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது,'' என்கிறார்கள் வியாபாரிகள்.