இறுதியாக நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத்தொடரில் கூட்டுறவு வங்கிக் கடன் தள்ளுபடி, வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இடஒதுக்கீடு போன்ற பல்வேறு அறிவிப்புகளை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாமல் வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கியது பேசுபொருளானது.
தேர்தல் பிரச்சாரத்தில் ''வன்னியர்களுக்கான 10.5 சதவீத இடஒதுக்கீடு தற்காலிகமானதே. சாதிவாரியாக மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்ட பிறகு, வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு உறுதியாகும். குழு தரும் அறிக்கையின் அடிப்படையில் வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு கூடுவதற்கும், குறைவதற்கும் வாய்ப்புள்ளது'' என்ற துணை முதல்வர் ஓபிஎஸ்-ன் பேச்சு சர்ச்சையைக் கிளப்ப, பாமக நிறுவனர் ராமதாஸ், ''இது தற்காலிக சட்டம் அல்ல. சமூகநீதி தெரியாத சிலர் இது தற்காலிக சட்டம் என பேசிவருகின்றனர். இது தற்காலிக சட்டம் இல்லை என முதல்வர் என்னிடம் ஃபோனில் கூறினார்'' என கூறியிருந்தார்.
துணை முதல்வர் ஓபிஎஸ் மட்டுமில்லாது, வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரும் தனது தேர்தல் பிரச்சாரத்தில் இந்தச் சட்டம் தற்காலிகமானது என கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. தேர்தல் நேர பலனுக்காகவே இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டதாக எதிர்க்கட்சிகளும் கருத்து தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், வன்னியர்களுக்கான 10.5 சதவீத இடஒதுக்கீடு குறித்து தமிழக அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த அபிஸ்குமார் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.