தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, கடந்த 2011-15 ஆம் ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தபோது, வேலை வாங்கித் தருவதாகக் கூறி 81 பேரிடம் ரூ.1.62 கோடி மோசடி செய்ததாக கணேஷ்குமார், தேவசகாயம், அருண்குமார் உள்ளிட்டோர் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்தனர்.
இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கினை சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைத்திருந்தது. பணம் கிடைத்துவிட்டதால் சிலர் சமரசமாகப் போக விரும்புவதாகத் தெரிவித்ததை அடுத்து இந்த வழக்கினை நீதிமன்றம் முடித்து வைத்தது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில், அந்த வழக்கினை விசாரித்த உச்சநீதிமன்றம் செந்தில் செந்தில் பாலாஜி மீதான மோசடி வழக்கைத் தொடர்ந்து நடத்தலாம் என உயர்நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டது.
இதனைத் தொடர்ந்து இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை என்று சொல்லி விசாரணை நடத்தி வரும் சிபிசிஐடிக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இதனிடையே செந்தில் பாலாஜி வழக்கில் முறைகேடு நடந்துள்ளதாகக் கூறி நாங்களும் விசாரிக்க வேண்டும், அதனால் எங்களுக்கும் அனுமதியளிக்க வேண்டும் என்று அமலாக்கத்துறை சார்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனைத் தொடர்ந்து இரண்டு மனுவும் நீதிபதி ராமசுப்பரமனியன் தலைமையிலான அமர்வு விசாரித்து வந்த நிலையில் தற்போது தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
அதில், செந்தில் பாலாஜி தொடர்பான வழக்கின் விசாரணையை தொடர்ந்து நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் தேவைப்பட்டால், சிறப்பு விசாரணைக் குழு அமைத்து விசாரணையைத் தொடர வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத்துறையால் தொடரப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.