கரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு போடப்பட்டதால் தமிழகத்தில் லட்ச கணக்கில் உள்ள ஆட்டோ தொழிலாளர்கள், மூட்டை தூக்கும் தொழிலாளர்கள், தள்ளுவண்டி வியாபாரிகள், காய்கறி கடை வைத்து வியாபாரம் செய்பவர்கள், சிறு வியாபாரிகள், தூய்மை பணியாளர்கள், மாட்டு வண்டி ஓட்டுநர்கள், பத்திரிகை துறையை சேர்ந்தவர்கள், கூலி தொழிலாளர்கள், அமைப்பு சாரா தொழிலாளர்கள் என பலதரப்பினரும் பாதிக்கப்படுவார்கள். அவர்களுக்கு நிவாரண நிதியுதவி, உணவுக்கான வழியை ஏற்படுத்தி தரவேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டுக்கோள் விடுத்தார்.
ரேஷன் கார்டுக்கு ஆயிரம் ரூபாய், 15 கிலோ அரிசி, 1 கிலோ பருப்பு, 1 லிட்டர் எண்ணெய் தருவதாக அறிவித்து அதன்படி வழங்கிவருகிறது தமிழ அரசு. இது ஒரு வாரத்துக்கு மட்டுமே வரும். ஏழைமக்களுக்கு கூடுதல் நிதியுதவி தரவேண்டும் என கோரிக்கைவிடுத்தார். (அனைத்து கட்சி ஆலோசனை கூட்டத்துக்கு பின்னர் 5 ஆயிரம் ரூபாய் நிதியுதவி பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்) அரசின் செயல்பாடுகள் முடங்கியதால் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு மளிகை பொருட்கள் வழங்குவது, கிருமிநாசினி பொருட்களை வழங்கும் பணி ஆகியவற்றில் தமிழகம் முழுவதும் திமுகவினர் களத்தில் இறங்கினர்.
அதன்படி திருவண்ணாமலை தெற்கு மாவட்ட திமுக சார்பில், மாவட்டத்தில் உள்ள அடிமட்ட தொழிலாளர்கள், ஏழைமக்கள், அமைப்பு சாரா தொழிலாளர்கள் 5 ஆயிரம் பேருக்கு, அரிசி, துவரம் பருப்பு, கடலை பருப்பு, மிளகாய் தூள், கடுகு, சோப்பு என 1000 ரூபாய் மதிப்புள்ள பொருட்களை திருவண்ணாமலை தெற்கு மா.செ.வும், முன்னாள் அமைச்சருமான எ.வ.வேலு எம்.எல்.ஏ தலைமையில், திமுக நிர்வாகிகளான முன்னாள் அமைச்சர் பிச்சாண்டி எம்.எல்.ஏ, சாவல்பூண்டி சுந்தரேசன், ஸ்ரீதரன் போன்றவர்கள் ஏப்ரல் 16ந்தேதி முதல் வழங்க தொடங்கியுள்ளார்கள்.
கடந்த 10 தினங்களாக எ.வ.வேலு, அவரது மகன் மருத்துவர் கம்பன் போன்றவர்கள் பல அமைப்பினர் மற்றும் ஏழை பொதுமக்களை சந்தித்து இலவச மளிகை பொருட்களை வழங்கினார்கள், அதேபோல் கரோனா நோயில் இருந்து தற்காத்துக்கொள்ள கிருமிநாசினிகள், முககவசங்கள், கையுறை போன்றவற்றை மருத்துவ பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், காவலர்கள் போன்றவர்களுக்கு வழங்கினர்.
அதேபோல் பாதுகாப்பு பணியில் ஈடுப்படும் காவல்துறையினர், தூய்மை பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு மதிய உணவு, தண்ணீர் பாட்டில், பிஸ்கட் போன்றவற்றை கடந்த 20 நாட்களாக திருவண்ணாமலை மாவட்ட திமுக சார்பில் வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடதக்கது.
திமுகவின் இந்த உதவிகளை கண்டு பொதுமக்கள் மட்டும்மல்லாமல், அதிகாரிகள் வட்டாரத்திலும் பெரும் பாராட்டு திமுகவினருக்கு கிடைத்துள்ளது. இதனைப்பார்த்து ஆளும்கட்சியான அதிமுக நிர்வாகிகள், அதனுடன் கூட்டணியில் உள்ள பாமக, தேமுதிக போன்ற கட்சி நிர்வாகிகள் அதிர்ச்சியில் உள்ளனர். அதிமுகவில் உள்ள சில நிர்வாகிகள் மட்டும் தங்களது சொந்த பணத்தில் சில ஏழை மக்களுக்கு பொருள் உதவி செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.