தமிழ்நாட்டில் 11ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. 2022-23 கல்வி ஆண்டிற்கான 11ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 14ம் தேதி துவங்கி ஏப்ரல் 5ம் தேதி வரை நடைபெற்றது. இதில் 7,76,844 மாணவ மாணவிகள் தேர்வு எழுதினர்.
இவர்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியாகும் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்ததன்படி பிற்பகல் 2 மணிக்கு வெளியானது. மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in மற்றும் www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்களில் தங்களின் பதிவு எண் மற்றும் பிறந்த தேதி விவரங்களை பதிவு செய்து தெரிந்துகொள்ளலாம்.
11ம் வகுப்பில் மொத்தம் 7,06,413 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவர்கள் 3,14,444 மற்றும் மாணவிகள் 3,91,968 பேர். 11ம் வகுப்பு பொதுத்தேர்வு மொத்த தேர்ச்சி 90.93 சதவீதம். இதில் மாணவிகள் 94.36%, மாணவர்கள் 86.99%. மாணவர்களை விட மாணவிகள் 7.37% அதிகம் தேர்ச்சி அடைந்துள்ளனர். அரசுப் பள்ளிகள் 84.97 சதவீதமும், அரசு உதவிப்பெறும் பள்ளிகள் 93.20 சதவீதமும் தேர்ச்சி அடைந்துள்ளன.
முக்கியப் பாடங்களான இயற்பியல் பாடப்பிரிவில் 95.37%, வேதியியல் பாடப்பிரிவில் 96.74% உயிரியல் பாடப்பிரிவில் 96.62%, கணிதப் பாடப்பிரிவில் 96.01%, தாவரவியல் பாடப்பிரிவில் 95.30%, விலங்கியல் பாடப்பிரிவில் 95.27%, கணினி அறிவியல் பாடப்பிரிவில் 99.25%, வணிகவியல் பாடப்பிரிவில் 94.33%, கணக்குப்பதிவியல் பாடப்பிரிவில் 94.97% பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழில் 9 பேர் 100க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். அதேபோல் ஆங்கிலத்தில் 13, இயற்பியலில் 440, விலங்கியலில் 34, வேதியியலில் 107, உயிரியலில் 65, கணிதம் 17, தாவரவியலில் 2, கணினி அறிவியலில் 940, வணிகவியலில் 214, கணக்குப்பதிவியலில் 995, பொருளியலில் 40, கணினி பயன்பாடுகளில் 598, வணிக கணிதம் மற்றும் புள்ளியியலில் 132 பேர் 100க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர்.
தேர்ச்சி விகிதத்தில் திருப்பூர் மாவட்டம் 96.33 சதவீதத்துடன் முதல் இடத்தில் உள்ளது. ஈரோடு மாவட்டம், 96.18 சதவீதத்துடன் இரண்டாம் இடத்திலும், கோவை 95.73 சதவீதத்துடன் மூன்றாம் இடத்திலும் உள்ளன.
11ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாற்றுத்திறனாளி மாணவர்கள் 88.98 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். 125 சிறைவாசிகள் தேர்வு எழுதிய நிலையில், 108 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
10 மற்றும் 11ம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு ஜூன் 27 முதல் ஜூலை 4ம் தேதி வரை துணைத் தேர்வு நடைபெறுகிறது. மாணவர்கள் துணைத் தேர்வுகளுக்கு மே 23ம் தேதி முதல் 27ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
11ம் வகுப்பு மாணவர்கள் விடைத்தாள் நகல், மறுகூட்டலுக்கு 24 முதல் 27 வரை பள்ளியின் மூலம் விண்ணப்பிக்கலாம். 10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்கள், தனித்தேர்வர்கள் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை மே 25 முதல் பெற்றுக்கொள்ளலாம்.