தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 13 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 3 ஆம் தேதி முடிவடைந்தது. தமிழ்நாட்டில் மொத்தம் 3,324 மையங்களில் நடந்த இந்த பொதுத்தேர்வை 8.17 லட்சம் மாணவர்கள் எழுதினர். இதனையடுத்து விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 10 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 21 ஆம் தேதி வரை நடைபெற்றது. விடைத்தாள் திருத்தும் பணியில் மொத்தம் 50,000 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் ஈடுபட்டிருந்தனர். பின்னர் விடைத்தாள் திருத்தும் பணி முடிந்தவுடன் மதிப்பெண் பதிவேற்றம் செய்யும் பணியும் நிறைவடைந்தது.
இந்த நிலையில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. 97 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று தேர்ச்சி விகிதத்தில் விருதுநகர் மாவட்டம் தமிழ்நாட்டில் முதலிடம் பிடித்துள்ளது. இரண்டாம் இடத்தை திருப்பூர் மாவட்டமும், மூன்றாம் இடத்தை பெரம்பலூர் மாவட்டமும் பிடித்துள்ளன. தேர்வு எழுதிய 8.03 லட்சம் பேரில் 7.55 லட்சம் மாணவர்கள் என 94.03 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதில் மாணவிகள் 96.38 சதவீதமும், மாணவர்கள் 91.45 சதவீதமும் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் 4.93 சதவீதம் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மாணவர்களின் தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு ஜூன் 19 ஆம் தேதி துணைத்தேர்வு நடைபெறும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. நடந்து முடிந்த 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 47,934 பேர் தோல்வியடைந்துள்ளனர். துணைத்தேர்வு குறித்து இன்று மாலைக்குள் முழு விபரம் வெளியிடப்படும் என்றும், தோல்வியடைந்த மாணவர்கள் அனைவரும் துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்குமாறும் அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது.