தென்காசி மாவட்டத்தின் ஆழ்வார்குறிச்சி அருகேயுள்ள மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய கிராமம் சம்பன்குளம். இந்த கிராமத்தை சேர்ந்த கூலித் தொழிலாளியான முருகன், அவரது மனைவி முத்துசெல்வி தம்பதியருக்கு இரண்டு மகன்கள் ஒரு மகள் உள்ளனர். இவர்களில் மூத்த மகன் சரவணன் (14) ஆழ்வார்குறிச்சியிலுள்ள பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார்.
சரவணன் சிறு வயதிலேயே இருதய நோயால் பாதிக்கப்பட்டவர். கூலித்தொழிலாளிகளான தம்பதியர் சக்திக்கு மீறி கடன்பட்டு மகனின் சிகிச்சையை மேற்கொண்டுள்ளனர். ஆனால், இருதயத்தில் ஓட்டை காரணமாக 2010ல் சரவணனுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதில் 10 லட்சம் செலவாகியிருக்கிறது. ஆனாலும் இருதய பிரச்சினை காரணமாக சரவணனுக்கு மாற்று இருதயம் பொருத்த வேண்டிய கட்டாயச் சூழல். அதற்காக பல லட்சம் செலவு ஆகும் என்றதால் பெற்றோர்கள் கவலையில் இருந்தனர். மேலும், மூச்சுத்திணறல் காரணமாக மாணவன் சரவணனின் படிப்பு பாதியில் நிறுத்தப்பட்டது. மேலும், மகனின் சிகிச்சைக்காக வருமானத்தை, மீறி பல லட்சம் செலவு செய்ததில் கடனும் ஆகியுள்ளது. மாதம் தோறும் மருந்து, மாத்திரை, சிகிச்சை செலவு 6 ஆயிரம் முதல் 8 ஆயிரம் வரை செலவு செய்து மகனின் உயிரைக் காப்பாற்ற போராடி வரும் ஏழைத்தாய், தன் நிலைமையை தெரிவித்து தனது மகனின் உயிரைக் காப்பாற்றுமாறு தமிழக முதல்வருக்கு உருக்கத்துடன் கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்.
“என்னுடைய மகன் இருதய நோயால் அவதிப்பட்டு வருகிறான். சிறிய நிலத்தை விற்றும், வீட்டை அடமானம் வைத்தும் அறுவை சிகிச்கைக்காக 10 லட்சம் மேல் செலவு செய்து விட்டோம். மாதம் தோறும் சக்திக்கு மீறிய மருத்துவச் செலவு செய்து என் மகனைக் காப்பாற்ற அரும்பாடு படுகிறோம். படிப்பையும் இதனால் பாதியில் நிறுத்த வேண்டிய நெருக்கடி. திருவனந்தபுரத்தில் உள்ள முக்கிய மருத்துவமனையில் அனுமதித்த போது மாற்று இருதய அறுவை சிகிச்சைக்கு 15 லட்சம் வரை செலவாகும் என்று சொல்லி விட்டார்கள். அது எங்களுக்கு முடியாத நிலை. எங்கள் மகனை தமிழக முதல்வர் தான் காப்பாற்ற வேண்டும்” என்று கண்ணீருடன் தெரிவித்திருக்கிறார் தாய் முத்துசெல்வி.