Skip to main content

நெடுவாசலில் போராட்டம் நடத்திய 7 விவசாயிகளுக்கு சம்மன்!  

Published on 05/05/2018 | Edited on 06/05/2018

 

nuduvasal


    

கீரமங்கலத்தில் கடந்த ஆண்டு நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும், டெல்லியில் போராடிய விவசாயிசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்து போராட்டம் நடத்தியதாக கீரமங்கலம் பகுதி விவசாயிகள் 7 பேருக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

 

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தில் கடந்த ஆண்டு மார்ச் 6 ந் தேதி.  நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க தடை விதிக்க வேண்டும் காவிரி பாசனப்பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும். டெல்டா மற்றும் தமிழகத்தில் எரிவாயு எடுக்க தடை விதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட என்ற கோரிக்கையை வலியுறுத்தி அறப்போராட்டம் நடத்த பந்தல் அமைத்துக் கொண்டிருந்து இறுக்கைகள் அமைத்துக் கொண்டிருந்தனர். 

 

அப்போது அங்கு வந்த அப்போதைய கீரமங்கலம் போலிஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், மற்றும் ஆலங்குடி காவல் துணைக் கண்காணிப்பாளர் அப்துல் முத்தலிபு ஆகியோர் அனுமதி இன்றி போராட்டம் நடத்தக் கூடாது என்று பேச்சு வார்த்தை நடத்தி கலைந்து போக சொன்னார்கள். ஆனால் போராட்டத்தில் இருந்தவர்கள் கலைய மறுத்தனர். அப்போது போலிசார் கைது செய்ய முன்வந்தனர். ஆனால் போராட்டக்காரர்கள் கைது செய்ய மறுப்பு தெரிவித்து கைது செய்தால் சாலை மறியல், உண்ணாவிரத போராட்டம் தொடர்வதாக கூறினார்கள். அதன் பிறகு நீண்ட நேரத்திற்கு பிறகு போராட்ட பந்தல் பிரிக்கப்பட்டாலும் இயக்கநர் களஞ்சியம் அங்கு வந்து பேசினார். அதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து அப்போது கீரமங்கலம் போலிசார் வழக்கு பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கை திரும்ப பெறவேண்டும் என்று அடுத்த சில நாளில் போராட்டம் நடத்த முயன்றனர். 

 

இந்த நிலையில் ஒரு ஆண்டு கடந்துவிட்ட நிலையில் நேற்று முன்தினம் கீரமங்கலம் பகுதியை சேர்ந்த நாம் தமிழர்கட்சி மாவட்டத் தலைவர் துரைப்பாண்டியன், சுந்தரபாண்டியன், பாண்டியன், குமார்,  தங்க.கண்ணன், செங்கு (எ) சின்னசாமி, சோமதுரை உள்ளிட்ட 7 விவசாயிகளுக்கு ஆலங்குடி நீதிமன்றத்தில் எதிர்வரும் 15 ந் தேதி ஆஜராக வேண்டும் என்று சம்மன் வந்துள்ளது. 

 

இந்த வழக்கு சம்மந்தமாக நெடுவாசல், வடகாடு போராட்டக் குழுவினர் கூறும் போது.. ஹைட்ரோ கார்ப்பன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று நெடுவாசல், நல்லாண்டார்கொல்லை, வடகாடு, கோட்டைக்காடு ஆகிய பகுதிகளில் தொடர் போராட்டங்கள் நடந்தது. அதே போல தமிழகம் மட்டுமின்றி பல வெளிநாடுகளிலும் தமிழர்கள் போராட்டங்கள் நடத்தினார்கள். ஆனால் எந்த ஊரிலும் விவசாயிகள் மீது வழக்கு பதிவு செய்யவில்லை. ஆனால் கீரமங்கலத்தில் போராடியவர்கள் மீது வழக்கு பதிவு செய்திருப்பது நெடுவாசல் திட்டத்திற்காக போராட்டம் நடத்தும் விவசாயிகள், அரசியல் கட்சிகள், அமைப்புகளை அச்சுறுத்தும் செயலாக உள்ளது. அதனால் இந்த வழக்கை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும் என்றனர். 
 

சார்ந்த செய்திகள்