கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அடுத்துள்ளது இறையூர். இங்கு 60 ஆண்டுகளுக்கு முன்பு மருதபிள்ளை என்பவர் சர்க்கரை ஆலையைத் தொடங்கினார். அருணா சர்க்கரை ஆலை என்று பெயரிடப்பட்டு சுமார் 50 ஆண்டுகள் இப்பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்குப் பெரும் உதவியாக இந்த ஆலை இருந்து வந்தது. பல ஆண்டுகளுக்கு முன்பு ஆலை முதலாளி மருதபிள்ளை இறந்துவிட்டார். அதன்பிறகு அவரது வாரிசுகள் தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த தியாகராஜ முதலியார் வாரிசுகளுக்கு அருணா சர்க்கரை ஆலையை விற்பனை செய்துவிட்டார்கள்.
அதன் பிறகு அம்பிகா சர்க்கரை ஆலை என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு சில ஆண்டுகள் கரும்பு அரவை செய்தனர். கடந்த சில ஆண்டுகளாகவே விவசாயிகள் அனுப்பிய கரும்பிற்கு பல கோடிகள் பணம் பாக்கி வைத்துள்ளது ஆலை நிர்வாகம். அதேபோன்று ஆலையில் வேலை செய்த தொழிலாளர்களுக்குச் சில ஆண்டுகளாகவே சம்பளம் தரவில்லை. அவர்களும் கரும்பு விவசாயிகளும் ஆலய நிர்வாகத்திடம் தங்களுக்குச் சேர வேண்டிய பணத்தைக் கேட்டு அவ்வப்போது போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இந்தநிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆலையை மூடிவிட்டனர். ஆலையில் வேலை செய்த சுமார் 60க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஆலை வளாகத்தில் உள்ள தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட குடியிருப்பில் வசித்து வருகின்றனர். இதற்கிடையே ஆலை நிர்வாகம் வங்கிகளில் வாங்கிய கடனை வசூலிப்பதற்காக வங்கிகள் ஒரு தனியார் ஏஜென்சியிடம் ஒப்படைத்துள்ளது. அந்த ஏஜென்சியை சேர்ந்த நபர்கள் ஆலைக் குடியிருப்பில் வசித்து வரும் தொழிலாளர்ளை அந்த வீடுகளைக் காலி செய்யச் சொல்லி மிரட்டி வருகிறார்கள்.
இதற்காக தொழிலாளர்கள் குடியிருக்கும் வீடுகளுக்கு வழங்கப்பட்டு வந்த மின்சாரம் குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. வீட்டைக் காலி செய்யுமாறு மிரட்டி வருகிறார்கள். இதற்காக பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறார்கள் வங்கி ஏஜென்சி ஆட்கள். இதனால் இங்கு வசித்து வரும் தொழிலாளர்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகிறார்கள்.
நேற்று தொழிலாளி சுரேஷ்குமார் அவரது மனைவி குணமங்கை ஆகியோர் வங்கிகள் மூலம் அனுப்பப்பட்ட ஏஜென்சி ஆட்களுக்குப் பயந்து இருவரும் ஆலை முன்பு தீக்குளிக்க போவதாக அறிவித்துள்ளனர். இது பற்றிய தகவலறிந்த பெண்ணாடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருபாலட்சுமி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். தீக்குளிக்கப் போவதாக அறிவித்த தம்பதியினர் இருவரையும் போலீஸ் நிலையம் அழைத்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது தொழிலாளி சுரேஷ் குமார், நான் உட்பட எங்கள் தொழிலாளர்களுக்கு ஆலை நிர்வாகம் இரண்டு ஆண்டுகளுக்கான ஊதியம், தொழிலாளர் வைப்பு தொகை, காப்பீட்டுத் தொகை உள்ளிட்டவற்றை இதுவரை எங்களுக்கு வழங்கவில்லை. அது எங்களுக்கு வழங்கி விட்டு எங்கள் குடும்பங்களை வெளியேற்றட்டும். அதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக போலீசார் தெரிவித்ததன் பேரில் அந்த தம்பதியினர் சமாதானம் அடைந்து அங்கிருந்து சென்றனர். இச்சம்பவம் பெண்ணாடம் இறையூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அம்பிகா சர்க்கரை ஆலை நிர்வாகம் விவசாயிகள் கொடுத்த கரும்பிற்குப் பணம் தராமல் ஏமாற்றி வருகிறது. அவர்கள் வேலை செய்த தொழிலாளர்களுக்குச் சம்பளம் தராமல் அவர்களைக் குடியிருப்பில் இருந்து துரத்த பார்க்கிறது. தொழிலாளர்களையும் விவசாயிகளையும் ஏமாற்றி வரும் இந்த ஆலை நிர்வாகத்தின் மீது அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்து வருகிறது எனக் குற்றம் சாட்டுகின்றனர் ஆலையில் பணியாற்றிய தொழிலாளர்களும், ஆலைக்கு கரும்பு அனுப்பிய விவசாயிகளும்.