சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா தற்போது அவரின் தண்டனை காலத்தை நிறைவு செய்த நிலையில் இன்று காலை பெங்களூருவிலிருந்து சென்னை கிளம்பி உள்ளார். காலை 7.30 மணி அளவில் அதிமுக கொடி பொருத்தப்பட்ட காரில் பயணத்தைத் தொடங்கிய அவர் தமிழக எல்லையைக் கடந்து வந்துகொண்டிருக்கிறார். அவரது வருகையையொட்டி தமிழக எல்லையில் சசிகலா ஆதரவாளர்கள் குவிந்துள்ளனர். அதேபோல் பாதுகாப்புப் பணியில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் வரும் வழியில் அவருக்கு பல்வேறு இடங்களில் அவரது தொண்டர்கள் அவர் பயணிக்கும் கார் மீது பூத்தூவி வரவேற்றனர். தற்பொழுது அவர் சூளகிரி நோக்கி பயணித்து வரும் நிலையில், அவருக்கு சூளகிரியில் வரவேற்பளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. சூளகிரி வரவேற்பிடம் ஐந்தாவது வரவேற்பிடமாகும். இதுபோல் இன்னும் 50 க்கும் மேற்பட்ட இடங்களில் அவருக்கு வரவேற்பு அளிக்க திட்டமிடபட்டுள்ளது. எனவே அவர் சென்னை வந்துசேர இரவு ஆகிவிடும் எனக்கூறப்படுகிறது. இன்று காலை அவர் தமிழக எல்லையில் வேறுவொரு காருக்கு மாறிய நிலையில் தற்பொழுது அவரது வாகனம் திடீரென சாலையில் நிறுத்தப்பட்டு தேர்தல் பிரச்சார வாகனத்தில் சசிகலா ஏற்றப்பட்டார். உணவு இடைவேளைக்காக அவர் பிரச்சார வாகனத்திற்கு மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது.