கடலூரில் திடீரெனெ கால்வாயில் ஏற்பட்ட உடைப்பால் சுமார் 150 ஏக்கர் நெற்பயிர்கள் சேதமடைந்தது பயிரிட்ட விவசாயிகளுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் சில நாட்களாகவே பரவலாக மழை பொழிந்து வரும் நிலையில் கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பெய்த கனமழையால் திட்டக்குடி அருகே உள்ள ஒரு கிராமத்தில் ஏரிக்கு செல்லும் ஓடையின் கால்வாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் பயிரிடப்பட்டிருந்த நெல் வயலில் தண்ணீர் புகுந்தது. இதனால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தது.
சரியான பராமரிப்பு பணிகள் நடைபெறாததே இந்த கால்வாய் உடைப்பு காரணம் என குற்றம்சாட்டும் அந்தப்பகுதி மக்கள், ஏக்கருக்கு 40 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்துள்ளதால் அரசு இதனைக் கருத்தில் கொண்டு சேதமடைந்த நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். ஒருபுறம் குறுவை சாகுபடிக்கு நீர் இல்லாமல் பயிர்கள் கருகும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கும் நிலையில் மறுபுறம் கடலூரில் கால்வாயில் ஏற்பட்ட திடீர் உடைப்பால் நெற்பயிர்கள் சேதமடைந்தது விவசாயிகளிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது.