தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் ஏற்காடு மலைப்பாதையில் திடீரென்று மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணிவரை சேலம் - ஏற்காடு சாலையில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் பல மாவட்டங்களில், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. முக்கிய மலைப் பகுதி சேலம் மாவட்டம் ஏற்காட்டில் வரலாறு காணாத மழை பெய்து வருகிறது. இந்நிலையில், சேலத்தில் இருந்து ஏற்காடு செல்லும் மலைப்பாதையில் 60 அடி பாலம் அருகே திங்கள்கிழமை (செப். 5) இரவு திடீரென்று மண் சரிவு ஏற்பட்டது. அந்த சாலையில் 20 அடி தூரத்திற்கு மேல் பாறைகள், கற்கள், மரங்கள் உருண்டு கிடந்தன.
இதுகுறித்து தகவல் அறிந்த ஏற்காடு வனத்துறை அலுவலர்கள், வருவாய்த்துறை, நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் சாலை சீரமைப்புப் பணிகளை முடுக்கிவிட்டனர். தீயணைப்பு வீரர்கள், அந்தச் சாலையில் சிக்கி இருந்த வாகன ஓட்டிகளை பத்திரமாக மீட்டனர். நல்வாய்ப்பாக யாருக்கும் காயமோ, உயிரிழப்புகளோ ஏற்படவில்லை. உடனடியாக அந்த சாலையில் போக்குவரத்துக்கு தடையும் விதிக்கப்பட்டது. இதையறியாமல் வழக்கம்போல் சேலத்தில் இருந்து ஏற்காடுக்குச் சென்ற மலைக்கிராமவாசிகள் பெரும் அவதிக்குள்ளாகினர். பின்னர் அங்கிருந்து பல கி.மீ. தூரம் சுற்றி, வலசையூர் வழியாக ஏற்காடுக்குச் சென்றனர்.
பொக்லைன், ஹிட்டாச்சி வாகனங்கள், கம்பரசர் இயந்திரங்கள் உதவியுடன் மண் சரிவு சீரமைக்கப்பட்டு வருகின்றன. மாவட்ட ஆட்சியர் கார்மேகம், சம்பவ இடத்தை செவ்வாய்க்கிழமை (செப்.6) நேரில் பார்வையிட்டு, சீரமைப்புப் பணிகளை வேகப்படுத்தினார். இதுகுறித்து ஆட்சியர் கார்மேகம் கூறுகையில், ''ஏற்காடு வனப்பகுதியில் சுமார் 10 செ.மீ. அளவிற்கு மழை பெய்துள்ளது. பல இடங்களில் சாலையின் மேல் தண்ணீர் வழிந்தோடுகிறது.
தற்போது ஏற்பட்டுள்ள மண் சரிவு, ஓரிரு நாளில் சீரமைக்கப்பட்டு, போக்குவரத்துக்கு சாலை திறந்து விடப்படும். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இந்த சாலையில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. மழை அபாயம் முடியும் வரை இந்த குறிப்பிட்ட நேரத்தில் வாகனங்களில் பயணம் செய்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். பகலில் செல்லும்போதும் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குப்பனூர் சாலை வழியாக ஏற்காடுக்குச் செல்ல எந்தவித தடையும் இல்லை'' என்றார்.