கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகில் உள்ளது பெரவலூர் கிராமம். இந்த கிராமப்பகுதி அருகே காட்டுக்கொட்டாய் பகுதியில் அரசு டாஸ்மாக் கடை ஒன்று இயங்கி வருகிறது. இங்கு குடிப்பதற்கு வரும் மது அருந்துவோர், மது அருந்திவிட்டு அருகில் உள்ள விவசாய நிலங்களில் பாட்டில்களை உடைத்து வீசி செல்கின்றனர். இதனால் விவசாயம் செய்வதற்காக நிலத்தில் இறங்கி விவசாயிகள் வேலை செய்ய முடியாத அளவில் காலில் கண்ணாடி சிதறல்கள் குத்தி காயம் ஏற்பட்டு வருகிறது.
மேலும், இப்பகுதியில் பெண்கள், பள்ளி குழந்தைகள் நடமாட முடியாத நிலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. காரணம், மது அருந்துவோரின் அட்டகாசம் அதிகரித்துள்ளது. இதை அப்பகுதி பொதுமக்கள் தட்டிக் கேட்பதால் மதுப் அருந்துவோருக்கும் பொதுமக்களுக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்படுகிறது. இந்த நிலையில் நேற்று டாஸ்மாக் கடை இங்கு இருந்தால் பிரச்சனை அதிகரிக்கும்; எனவே இதை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நேற்று அந்த டாஸ்மாக் கடை முன்பு திடீரென முற்றுகையிட்டு பொதுமக்கள் கடையைத் திறக்க விடாமல் விற்பனையாளர் மற்றும் மேற்பார்வையாளர் ஆகியோரை தடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தையடுத்து சுந்தராபுரம் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், வட்டாட்சியர் சையத் காதர் மற்றும் போலீஸார் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்ட போராட்டக்காரர்களை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இரண்டு தினங்களில் இந்த கடையை காலி செய்து விடுவதாக வட்டாட்சியர் உறுதி கூறியதைத் தொடர்ந்து முற்றுகையிட்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.