நாகை வணிக வளாகத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் அப்பகுதியே பரபரப்பானது. தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்து அடுத்தடுத்த பகுதிகளுக்கு பரவாமல் தடுத்தனர்.
நாகப்பட்டினம் வெளிப்பாளையம் தம்பிதுரை பூங்கா எதிரே அமைந்துள்ள வணிக வளாகத்தில் அமைந்துள்ள ஃப்ளெக்ஸ் பிரிண்டிங் பிரஸ் கடையின் ஊழியர்கள் நேற்று வழக்கம் போல வேலையை முடித்து விட்டுச் சென்றனர். இன்று ஞாயிற்றுக்கிழமை மற்றும் முழு முடக்கம் என்பதால் அப்பகுதி ஆளரவமற்று அமைதியாகக் காணப்பட்டது. இந்நிலையில் கடைகள் இருக்கும் பகுதியிலிருந்து புகை மூட்டம் காணப்பட்டுள்ளது. இதைக்கண்ட அக்கம் பக்கத்தினர் மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார் தீ விபத்து ஏற்பட்டிருப்பதை அறிந்து நாகை தீயணைப்பு நிலையத்திற்குத் தகவல் கொடுத்துள்ளனர்.
பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் அரைமணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதனால் பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது. "வணிக வளாகத்தில் இதுபோன்ற விபத்துகளைத் தவிற்கும் வகையில் நிறுவனங்கள், தீத்தடுப்பு கருவிகளைப் பயன்படுத்த வேண்டும் எனவும், காவலர்களை இரவு நேரத்தில் பணியமர்த்த வேண்டும்" எனவும் சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.