Skip to main content

விடுதியில் தங்கி படித்துவரும் மாணவிகள் 8 பேருக்கு திடீர் வயிற்றுப்போக்கு! 

Published on 09/10/2021 | Edited on 09/10/2021

 

Sudden diarrhea in 8 students staying in hostels!

 

சேலத்தில் தனியார் விடுதியில் தங்கிப் படித்துவரும் 8 மாணவிகளுக்கு ஒரே நேரத்தில் திடீரென்று வயிற்றுப்போக்கு ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

சேலம் மாவட்டம், சின்னத்திருப்பதி சாந்தி நகரில் பிண்டா பெண் குழந்தைகள் விடுதி செயல்பட்டுவருகிறது. இந்தக் காப்பகம், அரசு நிதியுதவியுடன் இயங்குகிறது. 

 

இந்த விடுதியில் 35 மாணவிகள் தங்கி, சேலத்தில் உள்ள அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் படித்துவருகின்றனர். இங்கு தங்கியுள்ள பெண் குழந்தைகளுக்குத் தினமும் மூன்றுவேளை உணவும் விடுதி நிர்வாகமே வழங்குகிறது. பள்ளிகளில் படிக்கும் மாணவிகள் மட்டும் தங்களுக்குத் தேவையான மதிய உணவை விடுதியிலிருந்து எடுத்துச் சென்று விடுவார்கள். 

 

இந்த விடுதியில் தங்கியபடி 9 மற்றும் 10ஆம் வகுப்பு படித்துவரும் மாணவிகளுள் 8 பேர் அக். 7ஆம் தேதி வழக்கம்போல் காந்தி சாலையில் உள்ள பள்ளிக்குச் சென்றனர். அங்கு மதிய உணவு சாப்பிட்ட அவர்கள், சிறிது நேரத்திலேயே அடுத்தடுத்து வயிற்றுப் போக்கால் பாதிக்கப்பட்டனர். 

 

மாலையில் விடுதிக்குத் திரும்பிய மாணவிகள், விடுதி காப்பாளர் சுகன்யாவிடம் இதுபற்றி தெரிவித்தனர். அதற்குப் பிறகும் அவர்களுக்கு விட்டு விட்டு வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து விடுதியில் உள்ள செவிலியர் ஒருவர் அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தார். 

 

மேல்சிகிச்சைக்காக மாணவிகள் 8 பேரும் சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. நேற்று (08/10/2021) காலை நிலவரப்படி அவர்கள் அனைவரும் ஓரளவு நலமாக இருப்பதாக மருத்துவமனைத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

 

இதுகுறித்து கன்னங்குறிச்சி காவல் நிலைய காவல்துறையினர் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர். விடுதியில் தங்கியுள்ள மாணவிகளின் உடலில் எந்த பாதிப்பும் ஏற்படாத நிலையில், பள்ளிக்கு உணவை எடுத்துச்சென்று சாப்பிட்டவர்களுக்கு மட்டும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மாணவிகள் பள்ளிக்குச் செல்லும் வழியிலோ அல்லது பள்ளியிலோ வேறு ஏதேனும் வாங்கி சாப்பிட்டார்களா என்பது குறித்தும் விசாரணை நடந்துவருகிறது. இச்சம்பவம் விடுதி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்