அடுத்தடுத்து பட்டாசு ஆலைகளில் வெடிவிபத்து ஏற்பட்டு, கொத்துக்கொத்தாக உயிர்கள் பறிபோயிருக்கும் நிலையில், பட்டாசுத் தொழிற்சாலைகளில் விபத்து தடுப்பு மற்றும் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வுக் கூட்டத்தை இன்று சிவகாசியில் நடத்தினார்கள் தமிழ்நாடு அரசு வருவாய்த்துறையினர்.
சிவகாசி வருவாய் கோட்டாட்சியர் தினகரன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் ‘மைக்’ பிடித்த தமிழ்நாடு பட்டாசு மற்றும் கேப் வெடி உற்பத்தியாளர்கள் சங்கத்தலைவர் ஆசைத்தம்பி, “இதுபோன்ற கூட்டங்களை அவசரகதியில் நடத்தக்கூடாது. விழிப்புணர்வு பெற வேண்டிய அனைவரும் கலந்துகொள்ள வேண்டுமென்றால், மூன்று நாட்களாவது அவகாசம் வேண்டும். பட்டாசுத் தொழில் பாதுகாப்பு வாரியம் என்பது எங்களது நீண்டநாள் கோரிக்கை. அதை, இந்த அரசாங்கம் நிறைவேற்றித் தர வேண்டும்.” என்றார்.
பட்டாசுத் தொழிலை விபத்தில்லாமல் நடத்துவதற்கான வழிமுறைகளை எவ்வாறு கடைப்பிடிக்க வேண்டும் என்று இக்கூட்டத்தில் எடுத்துரைத்தனர்.
இதுபோன்ற கூட்டங்களை சம்பிரதாயமாக நடத்துவதால் ஒரு பலனும் இல்லை. லட்சக்கணக்கான தொழிலாளர்கள் முழுமையாக தங்களை ஈடுபடுத்திவரும் பட்டாசுத் தொழில் என்பதால், பெருமளவில் தொழிலாளர்களை கலந்துகொள்ள வைத்து, விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.