ராமேஸ்வரத்தில் முன்னறிவிப்பு இன்றி மீன்பிடி அனுமதி டோக்கன்கள் வழங்குவது ரத்து செய்யப்பட்டதால் 3000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் மீன்பிடி தொழிலாளர்களுக்கான வார விடுமுறை நேற்று முடிந்து மீண்டும் இன்றைய வேலைநாள் தொடங்கிய நிலையில் மீன் பிடிக்க அனுமதி டோக்கன் வழங்கும் அலுவலகமானது மூடப்பட்டுள்ளது. வழக்கமாக எப்பொழுதும் காலை 6 மணிக்கே மீன் பிடிக்க அனுமதிக்கும் டோக்கனானது மீன்வள அதிகாரிகள் மூலம் வழங்கப்படும். இந்நிலையில், இன்று அதற்கான அலுவலகமே திறக்கப்படாத நிலையில் என்ன காரணம் என்று தெரியாமல் பல மணி நேரமாக மீனவர்கள் காத்திருந்தனர்.
ராமேஸ்வரம் துறைமுகத்தில் பைபர் படகுகள் மூலம் மீன் பிடிக்க அரசு தடை விதித்துள்ளது. ஆனால் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு இரண்டு பைபர் படகுகள் ராமேஸ்வரம் துறைமுகத்தில் வந்துள்ளது. சம்பந்தப்பட்ட படகு உரிமையாளர்களிடம் சொல்லியும் அவர்கள் கேட்கவில்லை. மீனவர்கள் சங்க தலைவரிடமும் இது குறித்து புகார் கொடுத்தும் அவர்களும் நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால் இன்று யாருக்குமே அனுமதி டோக்கன் கொடுக்கவில்லை என மீன்வள அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
ஆனால், பாதிக்கப்பட்ட மீனவர்கள் தரப்பில் கூறுகையில். 'ராமேஸ்வரத்தில் 750-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் உள்ளது. இதில் 400-க்கும் மேற்பட்டவை சாதாரண சிறிய ரக படகுகள். நாங்கள் காலையில் சென்று மீன்பிடித்து விட்டு மாலையில் திரும்பும் சிறிய படகுகளை கொண்டவர்கள். எங்களுக்கு ஏன் மீன்பிடி டோக்கனை தரவில்லை. பைபர் படகுகளுக்கு அனுமதி இல்லை என்றால் அரசு நடவடிக்கை எடுக்கட்டும். மீன்வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கட்டும். அதைவிடுத்து அப்பாவி மீனவர்களான எங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் ஏன் மீன்பிடி அனுமதி டோக்கனை தராமல் உள்ளார்கள்' என வேதனை தெரிவித்துள்ளனர்.