கேரளா அதிரடிப்படையால் சுட்டுக் கொல்லப்பட்ட மாவோயிஸ்ட் மணிவாசகத்திற்கு நினைவு நாள் கூட்டம் நடத்தக்கூடாது எனக் காவல்துறையினர் திடீர் தடை விதித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே உள்ள ராமமூர்த்தி நகரைச் சேர்ந்தவர் மணிவாசகம். மாவோயிஸ்ட். இவர் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருந்த நிலையில், தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா மாநிலங்களில் பதுங்கி இருந்தார். இந்நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு கேரளா மாநிலம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பதுங்கி இருந்த மணிவாசகமும், கூட்டாளிகளும் மற்றவர்களுக்கு ஆயுதப்பயிற்சி அளித்து வருவதாக மத்திய உளவுப்பிரிவிடம் இருந்து கேரளா மாநில காவல்துறைக்குத் தகவல் அளிக்கப்பட்டது.
இதையடுத்து அவரைச் சுட்டுப் பிடிக்க வனப்பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டு இருந்த தண்டர்போல்ட் என்ற அதிரடிப்படைக்கு மாநில அரசு உத்தரவிட்டது. தண்டர்போல்ட் காவல்துறையினர் 29.10.2019 ஆம் தேதி மணிவாசகத்தைச் சுற்றி வளைத்தனர். அப்போது இருதரப்புக்கும் துப்பாக்கிச் சண்டை நடந்துள்ளது. இதில், மணிவாசகம் மற்றும் அவருடன் இருந்த சென்னையைச் சேர்ந்த கார்த்திக், அரவிந்த் என்கிற சீனிவாசன், கன்னியாகுமரியைச் சேர்ந்த அஜிதா ஆகியோர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
மணிவாசகத்தின் மனைவி கலா, அவருடைய சகோதரி லட்சுமி நீதிமன்றத்தில் 10 நாட்களாக சட்டப் போராட்டம் நடத்தியே கேரளா காவல்துறையிடம் இருந்து மணிவாசகத்தின் சடலத்தை சொந்த ஊருக்குக் கொண்டு வர முடிந்தது. சொந்த ஊரான ராமமூர்த்தி நகரில் அவருடைய சடலம் 2019, நவ.14 ஆம் தேதி நள்ளிரவு தகனம் செய்யப்பட்டது. அப்போது மாவோயிஸ்ட்கள், ஆதரவாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் அவருடைய சடலத்துக்கு அஞ்சலி செலுத்தினர். இறுதிச்சடங்கின்போது பலர், பழிக்குப்பழி தீர்ப்போம்; சிந்திய ரத்தத்திற்கு ரத்தம் பார்ப்போம் எனச் சபதம் செய்தனர். சபதம் போட்ட சிலரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்நிலையில், மணிவாசகத்தின் நான்காம் ஆண்டு நினைவு நாள் அக். 28 ஆம் தேதி அனுசரிக்கப்பட்டது. இதையடுத்து அவருக்கு நினைவு நாள் கூட்டங்கள் நடத்தக்கூடாது எனக் காவல்துறையினர் மற்றும் கியூ பிரிவு காவல்துறையினர் திடீரென்று தடை விதித்தனர். ஓமலூர் மகளிர் காவல் ஆய்வாளர் இந்திரா தலைமையில் எஸ்ஐக்கள் பழனிசாமி, செல்வி, கருப்பண்ணன் மற்றும் காவல்துறையினர் ராமமூர்த்தி நகரில் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டனர். மற்றொருபுறம் கியூ பிரிவு எஸ்.பி., ஆனந்த்குமார் தலைமையில் ஆய்வாளர் கோகிலாம்பாள் தலைமையில் காவல்துறையினரும் கண்காணித்து வந்தனர். காவல்துறை கெடுபிடிகள் காரணமாக மாவோயிஸ்ட் ஆதரவாளர்கள் யாரும் ராமமூர்த்தி நகருக்கு வரவில்லை.