“இதெல்லாம் காலக்கொடுமைங்க..” என்று விருதுநகர் பள்ளி ஒன்றில் நடந்த மோசடி விவகாரத்தை வேதனையோடு சொன்னார் அந்த சமுதாய அமைப்பில் அங்கம் வகிக்கும் ஒருவர். “இப்பல்லாம் ஸ்கூல் நிர்வாகத்துக்கு அடிச்சிப் பிடிச்சி வர்றதே எவ்வளவு சம்பாதிக்கலாம்கிற கணக்கோடுதான். ஆனா.. விருதுநகர் இந்து நாடார்களுக்கு பாத்தியப்பட்ட ஷத்திரிய வித்யாசாலா பள்ளியிலும் மோசடி நடந்திருப்பதைத்தான் எங்களால் ஜீரணிக்க முடியவில்லை. ஏனென்றால், இந்தியாவில் எந்த ஒரு பள்ளிக்கும் இல்லாத வரலாற்றுப் பின்னணி ஷத்ரிய வித்தியாசாலா பள்ளிகளுக்கு உண்டு.” என்றார் குமுறலுடன்.
என்ன மோசடி? செய்தது யார்?
விருதுநகர் ஷத்ரிய வித்யாசாலா மெட்ரிகுலேசன் ஹையர் செகன்டரி ஸ்கூல் மேனேஜிங் டிரஸ்ட்டில் நிர்வாகக்குழு உறுப்பினராக இருக்கிறார் ஆனந்தவேல். இவருடைய மேற்பார்வையில்தான் அந்தப் பள்ளி இயங்கி வருகிறது. இவர் சூலக்கரை காவல் நிலையத்தில் அளித்துள்ள புகாரில் ‘இப்பள்ளியில் ஆய்வு நடத்தியபோது, பள்ளியின் செயலாளர் அருண்ராஜும், பொருளாளர் கோபாலும், பள்ளிகளின் நிர்வாகத்தில் தங்களின் சுயநலம் கருதி, மோசடி செய்ய வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் நம்பிக்கை மோசடி செய்து, பொய்யான ரசீதுகளை உற்பத்தி செய்து அதனை ஆவணப்படுத்தி, நிர்வாகத்திற்கு ரூ.74,94,293 பண இழப்பினை ஏற்படுத்தியிருக்கின்றனர்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
ஹனி டிவி என்பது விருதுநகரில் இயங்கிவரும் லோக்கல் சேனலாகும். கே.வி.எஸ். மெட்ரிகுலேசன் பள்ளியின் விளம்பரங்களை ஒளிபரப்பியதாக அந்தச் சேனல் மூலம் போலி பில்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து மற்ற லோக்கல் சேனல்களிடமும் காவல்துறை விசாரணை நடத்தியபோது, ‘அப்படி எந்த விளம்பரமும் செய்ததில்லை. அந்தப் பள்ளியின் பெயரில் பில் போட்டதும் இல்லை.’ என்று தெளிவுபடுத்தியுள்ளனர். பேருந்துகளின் பின்புறமும், கேபிள் டிவி மூலமும் விளம்பரம் செய்த செலவு என, குற்றம் சாட்டப்பட்ட இருவரும் கணக்கு காண்பித்திருக்கின்றனர். அந்தக் கணக்கில்தான் போலி பில்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இருவரும் சேர்ந்து, ஒரே ஆண்டில் ரூ.95 லட்சம் வரை மோசடி செய்திருப்பதாக காவல்துறை நடத்திய விசாரணையில் தெரியவந்திருக்கிறது.
“லஞ்சமும் ஊழல் மலிந்திருக்கும் இந்தக் காலத்தில் இதுபோன்ற மோசடிகளெல்லாம் சகஜமப்பா என்று சொல்லிவிட முடியாது. ஏனென்றால், ஷத்ரிய வித்யாசாலா பள்ளிகள் உருவான பின்னணியின் எங்கள் முன்னோர்களின் தியாகம் கொட்டிக்கிடக்கிறது.” என்று கண்கள் கசிந்திட விவரித்தார் அந்த உறுப்பினர்.
இதோ அந்த வரலாறு -
கி.பி.1702-1703 காலக்கட்டத்தில் நெல்லை மாவட்டத்தில் பெரும் பஞ்சம் ஏற்பட்டது. அதனால், அங்கு வசித்த நாடார் சமுதாயத்தினர் மதுரை, விருதுநகர், அருப்புக்கோட்டை, சிவகாசி என பல ஊர்களுக்கும் குடிபெயர்ந்தனர். வியாபாரம் என்பதை உயிர் மூச்சாகக் கருதும் அச்சமுதாயத்தினர், வியாபாரத்துக்கு கல்வியானது மிகமிக அவசியம் என்பதை உணர்ந்து ஒரு முடிவெடுத்தனர். பிடி அரிசித் திட்டம் உருவானது. அச்சமுதாயப் பெண்கள் சமையலுக்காக வீட்டிலுள்ள அரிசியை எடுக்கும்போது, ஒரு பிடி அரிசியைத் தனியாக ஒரு கலயத்தில் இடவேண்டும். இப்படி ஒவ்வொரு வீட்டிலும் கலயத்தில் சேர்த்த அரிசியானது, மொத்தமாகச் சேகரிக்கப்படும். அதை விற்று கிடைத்த பணத்தில் விருதுநகரில் பள்ளி ஒன்றை நடத்தினர். அந்தப் பள்ளிதான் ஷத்ரிய வித்யாசாலா பள்ளி. இதுபோக, கோவில் நிதி, பல்வேறு தரப்பிலிருந்தும் வசூலாகும் மகமை நிதி, சமுதாய மக்களின் நன்கொடை என முடிந்த மட்டிலும் பணம் சேர்த்து, தங்களுக்குத் தேவையான கல்வியை எல்லோருக்கும் கிடைக்கும்படி செய்தனர்.
‘அக இருள் அகற்றி அறிவு ஒளி வீசுக! புண்ணியம் கோடி ஓர் ஏழைக்கு அறிவித்தல்..’ என்ற வரிகளுடன் ஆலமரத்தடியில் பிடி அரிசி சேகரிக்கும் கலயமும், தாமரை மலர்ந்த குளத்தின் பின்னணியில் சூரியன் உதிப்பதும்தான் பிடி அரிசிப் பள்ளியின் லோகோவாக இருக்கிறது. விருதுநகரில் உள்ள அந்தப் பிடி அரிசிப் பள்ளியில்தான், பின்னாளில் தமிழகத்தின் முதலமைச்சராகி கல்விப் புரட்சி ஏற்படுத்திய கர்மவீரர் காமராஜர் படித்தார்.
முன்னோர்களின் திட்டமிடலும், தியாகமும் ஒன்றிணைந்து உருவான பள்ளிகளின் நிர்வாகத்தில் இப்படி ஒரு மோசடி நடந்திருக்கிறதே என்பதுதான் விருதுநகரின் பொதுவான ஆதங்கமாக உள்ளது.