விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மற்றும் புதிய உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி விருதுநகரில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் கே.டி. ராஜேந்திரபாலாஜி பேசினார்.
“அதிமுக உறுப்பினர் சீட்டானது தொண்டர்களுக்கு ஒரு பாதுகாப்பு கவசம். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலத்திலிருந்து கட்சியில் உழைக்கிறேன் என்பதற்கான சான்று. தற்போதுள்ள நிர்வாகிகள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, இ.பி.எஸ். படம் உள்ள புதிய உறுப்பினர் அட்டையை வைத்திருக்கவேண்டும். அதிமுக தொண்டர்கள் தெளிவானவர்கள். இயக்கத்தின் மீது பற்று, பாசம், வீரம், வேகம், எதையும் சாதித்து எதிரிகளை வீழ்த்தக்கூடிய களப்பணியில் நின்று போராடக்கூடியவர்கள். போராட்டத்தை எல்லாம் சந்தித்து நாடாளுமன்றத் தொகுதியில் கரணம் தப்பினால் மரணம் என்ற வகையில், இங்கே திமுக கூட்டணி குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியைப் பெற்றது. நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தொண்டர்கள், கழக நிர்வாகிகள், தேமுதிக கூட்டணியின் விஜய பிரபாகரன் வெற்றி பெறவேண்டுமென்று கடுமையாகப் போராடினார்கள்.
விருதுநகர் பாராளுமன்றத்தில் தேமுதிக தான் வெற்றிபெறும் என்று உலகமே எதிர்பார்த்தது. கடைசி நேரத்தில் ஏற்பட்ட சதியில், மோடி வேண்டும் என்று ஒரு அணியிலும், மோடி வேண்டாம் என்று ஒரு அணியிலும் தமிழக மக்கள் பிரிந்த நிலையிலும், நாம் அதிக வாக்குகளைப் பெற்றோம். அதிமுக 40 தொகுதியிலும் தோற்றுவிட்டது என்று தொலைக்காட்சிகளில் தினந்தோறும் பட்டிமன்றம் நடத்துகிறார்கள். அந்த அரசியல் மேதைகளுக்கு எல்லாம் நாங்கள் சொல்வது என்னவென்றால், 40 தொகுதிகளில் அதிமுக வலுவாக தடம் பதித்துள்ளது. எவ்வளவு பெரிய சோதனைகளிலும் அதிக ஓட்டுகளைப் பெற்றிருக்கிறோம்.
வெற்றி என்பது அதிமுகவுக்கு எளிது. பல நேரங்களில் அதிமுக பல சோதனைகளைச் சந்தித்துள்ளது. ஜெயலலிதா ஆட்சியில் பென்னாகரம் தொகுதியில் அதிமுக டெபாசிட் இழந்தது. அன்று திமுக ஆளுங்கட்சி. பின்பு நடைபெற்ற பொதுத் தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்றது. அப்போது தேமுதிக எதிர்க்கட்சியாக வந்தது. திமுகவுக்கு மூன்றாம் இடம்தான் கிடைத்தது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் ஜெயலலிதா பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அங்கு திமுக டெபாசிட் இழந்தது. 1996ல் அதிமுக 4 சீட், 1999ல் திமுக 2 சீட். 1980ல் எம்.ஜி.ஆர். காலத்தில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் சிவகாசி, கோபிசெட்டிபாளையம் இரண்டு தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்றோம். ஆக, நமக்கு வரலாறு இருக்கிறது. அதிமுக வீழ்வதுபோல் தெரியும். ஆனால் வீறுநடை போட்டு எழுந்துவிடும். திமுக என்பது ஒரு மாயை. திமுகவுக்கு தனிநபர் ஓட்டு வங்கி கிடையாது. பல்வேறு கட்சிகளை உள்ளடக்கிய ஒரு ஓட்டு வங்கி. அதிமுகவுக்கு இரட்டை இலையில் ஓட்டு போட இன்றும் கோடிக்கணக்கான பேர் உள்ளனர். எம்.ஜி.ஆர். படத்தைப் பார்த்து இவர்தான் தலைவர், இவர்தான் முதல்வர் என்று நினைக்கும் இளைஞர் கூட்டம் இன்றும் தமிழ்நாட்டில் உள்ளது. இந்த இயக்கத்தை சமூக வலைத்தளங்களில் தவறாகப் பேசி கட்சியை அழிக்க நினைத்தால் அது நடக்கவே நடக்காது.
மக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று விழித்துக் கொண்டார்கள். யாருக்கு ஓட்டு போட்டால் நமக்கு நன்மை கிடைக்கும் என்று நடைபெற்ற எம்பி தேர்தலுக்குப் பிறகு மக்கள் சிந்திக்க ஆரம்பித்துவிட்டார்கள். வெற்றி என்பது யாருக்கும் நிரந்தரமல்ல அதிமுக வரும் 2026 சட்டமன்றத் தேர்தல் அமோக வெற்றி பெறும். அதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது. விருதுநகர் மாவட்டத்தில் ஏழு தொகுதியிலும் அதிமுக வெற்றி பெறும். ஜெயலலிதா ஆட்சியில் ஒரு லட்சம் கழக நிர்வாகிகளுக்கு பச்சை மையில் கையெழுத்து போடும் அதிகாரத்தை வழங்கினார். அதே அதிகாரத்தில் நீங்கள் மீண்டும் வரவேண்டுமென்றால், சமுதாய சேவைகளை அதிகம் செய்ய வேண்டும்.” எனப் பேசினார்.