சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற 2021 - 2022 வரவு செலவு திட்ட உரையில், நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பின்வரும் அறிவிப்பை வெளியிட்டார். அப்போது அவர் பேசியதாவது, “பயிர்க்கடனில் உள்ள குளறுபடிகள் எல்லாம் நிறைய தெரியவந்து, ஏற்கனவே ஒத்திவைக்கப்படாத கடன்களை சீர்திருத்தி, எவையெல்லாம் தகுதி இல்லை என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் அரசுக்கும் மக்களுக்கும் பெரிய சேமிப்பு வந்துள்ளது.
அதேபோல், நகைக்கடன் தள்ளுபடியில் நடந்த ஆய்வில் பல தகவல்கள் தெரியவந்துள்ளன. அதனால் ஒரு கணிசமான தொகை இழப்பாக ஏற்படாமல், தவறான தகவலை சமர்ப்பித்து கடன் பெற்றவர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பிறப்பு, இறப்பு தொடர்பான பதிவுகள் மூலம் குளறுபடிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதனை ஆய்வுசெய்து பார்க்கும்போது, பலர் இன்னும் உயிரிழந்தவர்களின் பெயரில் முதியோர் ஓய்வூதியம் (ஓஏபி) பெற்றுக்கொண்டிருக்கின்றனர். அதேமாதிரி, உயிரிழந்தவர்களின் பெயரில் இலவச அரிசி வழங்கப்பட்டுவருகிறது. இந்த மாதிரி உதாரணங்களுக்கெல்லாம் அரசாங்கத்திடம் தகவல்கள் இல்லை.
அதேபோல், ஆய்வின் மூலம் கண்டறியப்பட்ட இவற்றின் மூலம் உண்மையான தகுதிவாய்ந்தவர்களைக் கண்டறிந்து இவை அனைத்தும் கொண்டு செல்ல சரியாக இருக்கும். தகுதியுடையோர் பலர் முதியோர் பென்ஷன் பெறாமல் இருக்கிறார்கள் என தகவல் வருகிறது என்பதை முதலமைச்சர் குறிப்பிட்டார். அதனால் முதியோர் பென்ஷனின் எண்ணிக்கையில் 10 சதவீதம் அதிகரிக்க வேண்டும் என்று கூறியதற்கிணங்க தற்போடு அதை அதிகரித்திருக்கிறோம்” என தெரிவித்தார்.