Skip to main content

பணம் இல்லாமல் தவித்த மாணவிகள்... சொந்த செலவில் வாடகை காரில் அனுப்பி வைத்த அரசு அதிகாரி

Published on 25/03/2020 | Edited on 25/03/2020

 

கையில் காசும் இல்லாமல், சொந்த ஊருக்குப் போக பேருந்தும் இல்லாமல் தவித்த மாணவிகளைத் தனது  சொந்த செலவில் வாடகை காரில் அனுப்பி வைத்துள்ளார் நகராட்சி ஆணையர். சொந்த செலவில் அனுப்பி வைத்த அதிகாரிக்குப் பாராட்டு குவிகிறது. 
 

உலகையே ஆட்கொண்டு உயிர்களைக் குடித்துக் கொண்டிருக்கும் கண்ணுக்குத் தெரியாத கரோனா வைரஸிடமிருந்து இந்திய மக்கள் தற்காத்துக் கொள்ள செவ்வாய்கிழமை மாலை 6 மணி முதல் 21 நாட்கள் வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் பல ஊர்களில் இருந்து சொந்த ஊருக்குத் திரும்பிய மக்கள் 6 மணிக்கு பிறகு பல பேருந்து நிலையங்களிலும் தவித்தனர்.

 

pudukkottai



புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில் 6 மணிக்குப் பிறகு ரோந்து சென்ற மாவட்ட எஸ் பி அருண்சக்திகுமார் மற்றும் ஆர்டிஒ ஆகியோர் மதுரை, காரைக்குடி செல்ல பேருந்து இல்லாமல் பேருந்து நிலையத்தில் தவித்துக் கொண்டிருந்தவர்களுக்கு வாடகை வேன் ஏற்பாடு செய்து கொடுத்து அதிக வாடகை வாங்காமல் ஏற்றிச் செல்ல வேண்டும் என அனுப்பி வைத்தனர்.
 

அடுத்த அரைமணி நேரத்தில் நகராட்சி ஆணையர் (பொ) சுப்பிரமணியன் ஆய்வுக்கு வந்தார். அப்போது மதுரையில் இருந்து சீர்காழி செல்ல வந்த 5 கல்லூரி மாணவிகள் புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில் பேருந்து இல்லாமல் தவித்தது தெரிய வந்தது. 
 

காரில் செல்ல பணமும் இல்லை என கண்ணீர் சிந்திய நிலையில் அங்கு நின்றனர். அந்தப் பகுதிக்கு வந்த நகராட்சி ஆணையர் (பொ) சுப்பிரமணியன் அந்த மாணவிகளின் நிலையைப் பார்த்து அவர்களுக்காக  வாடகை கார் ஏற்பாடு செய்து புதுக்கோட்டையில் இருந்து சீர்காழி செல்ல தனது சொந்த பணத்தில் ரூ. 4 ஆயிரம் கார் வாடகை கொடுத்து பாதுகாப்பாக சீர்காழிக்கு அனுப்பி வைத்தார். மாணவிகள் கண்ணீரோடு நன்றி சொல்லி புறப்பட்டனர்.
 

பாதுகாப்புக்காக கார் ஓட்டுநர் செல்போன் எண்ணையும் வாங்கி வைத்துக் கொண்டவர் வீடுகளுக்குச் சென்றதும் அவசியம் போன் செய்து தகவல் கொடுக்கவும் எனக் கூறி அனுப்பி வைத்தார்.
 

புதுக்கோட்டை நகராட்சி ஆணையர் மற்றும் மாவட்ட அதிகாரிகளின் இந்த மனிதாபிமான செயலைப் பார்த்து சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.

 

சார்ந்த செய்திகள்