கடலூர் மாவட்டம், சிதம்பரம் நகரத்தில் தில்லை மெட்ரிக் நாட்டுப்பிள்ளை தெருவில் உள்ளது. இந்த பள்ளியின் வழியாக சி.தண்டேஸ்வரநல்லூர் ஊராட்சியில் வசிக்கும் மாற்றுத்திறனாளி முதியவர் ராமலிங்கம் (வயது 61) அவ்வப்போது இரண்டு கவட்டி தடியைப் பயன்படுத்தி நடந்து செல்வார். சில நேரங்களில் மிகவும் சிதிலமடைந்த மூன்று சக்கர சைக்கிளில் கையால் மிதிக்க முடியாமல் சைக்கிளை ஓட்டி செல்வார். இதனை அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகள் பார்க்காமல் இருந்திருக்க முடியாது.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் அந்த முதியவர் முடியாத நிலையில் இரு கவட்டி தடிகளை ஊன்றியவாறு தில்லை மெட்ரிக் பள்ளி வகுப்பறையில் மாணவர்கள் கல்வி பயின்று கொண்டிருந்தபோது அங்கிருந்த ஆசிரியரிடம் மிகவும் முடியவில்லை என்றும் இருக்கிற சைக்கிளும் மிகவும் பழுதாகி விட்டது. எதாவது உதவி செய்யுங்கள் எனக் கேட்டுள்ளார். அப்போது அங்கிருந்த ஆசிரியர் முதியவரைக் கண்டிப்பாக உதவி செய்கிறோம் என்று சமாதானம் செய்து அனுப்பி வைத்து உள்ளார்.
இந்த சம்பவத்தைப் பார்த்த சக மாணவர்கள் பள்ளியில் படிக்கும் 1- ஆம் வகுப்பு முதல் 8- ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் மத்தியில் பகிர்ந்துள்ளனர். பின்னர் மாணவ, மாணவிகளே தானாகவே பெற்றோரின் அனுமதியுடன் வீட்டில் சேர்ந்து வைத்திருந்த உண்டியல் காசு, சிலர் இந்த சம்பவத்தை பெற்றோர்களிடம் கூறி அவர்களால் முடிந்த காசுகளை வாங்கி வந்து ஆசிரியர்களிடம் கொடுத்து அந்த முதியவருக்கு ஒரு புதிய மூன்று சக்கர சைக்கிள் வாங்கி கொடுங்கள் சார் என்று கூறியுள்ளனர். இதனைக் கேட்ட ஆசிரியருக்கு திகைப்பை ஏற்படுத்தியது. பின்னர் மாணவர்கள் எடுத்து வந்த சிறு சிறு காசுகளை ஆசிரியர்கள் எண்ணியபோது ரூபாய் 7,200 இருந்துள்ளது.
இதுகுறித்து பள்ளியின் தாளாளரிடம் ஆசிரியர்கள் கூறியவுடன் மகிழ்ச்சி அடைந்த பள்ளியின் தாளாளர் இதற்கு தானாகவே நிதி திரட்டிய அனைத்து மாணவர்களையும் அழைத்து எந்த நிலையிலும் உதவ வேண்டும் என்ற எண்ணம் சிறுவயதில் வளர்த்து கொண்டதற்கு வாழ்த்து கூறியுள்ளார்.
பின்னர் ஒரு ஆசிரியரை அனுப்பி புதிய மூன்று சக்கர சைக்கிளை வாங்கி வர அனுப்பியுள்ளார். கடைக்காரரோ ரூபாய் 7,800 எனப் பிடிவாதமாக இருந்துள்ளார். அப்போது அந்த ஆசிரியர் மாணவர்கள் நிதி திரட்டிய விசயத்தை கடைக்காரரிடம் கூறியவுடன் ரூபாய் 600 குறைக்கப்பட்டு ரூபாய் 7,200- க்கு புதிய மூன்று சக்கர சைக்கிளை வாங்கினர்.
இதனை சம்பந்தப்பட்ட மாற்றுத்திறனாளி முதியவாரன ராமலிங்கத்தை திங்கள் கிழமை பள்ளிக்கு அழைத்து வந்து அனைத்து மாணவர்கள் மத்தியில் அவருக்கு புதிய மூன்று சக்கர சைக்கிளை பள்ளியின் தாளாளர் உள்ளிட்ட ஆசிரியர் மத்தியில் மாணவ, மாணவிகள் வழங்கி மகிழ்ச்சியுடன் முதியவருக்கு கை குலுக்கினார்கள். மாணவ கண்மணிகள் கை குலுக்கியது தாத்தா நாங்கள் இருக்கிறோம் எதற்கும் கவலை அடையாதீர்கள் என்பதுபோல் இருந்தது.
மாணவர்கள் வழங்கிய சைக்கிளில் அமர்ந்த முதியவர் கண்ணீர் மல்க அனைவருக்கும் கைகூப்பி நன்றியை தெரிவித்துக் கொண்டார். இந்த சம்பவம் அனைவருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இதுகுறித்து பள்ளியின் தாளாளர் செந்தில்குமார் கூறுகையில், "பள்ளியில் படிக்கும் மாணவர்கள் அனைவருக்கும் முதல் உறுதிமொழியாக கூறுவது நாம் பள்ளிக்கு வரும் வழியிலோ அல்லது சுற்றுப்புறத்திலோ பலர் நம்மளவிட துயரத்தில் இருப்பார்கள் அவர்களுக்கு நம்மால் முடிந்த அளவுக்கு எதோ ஒரு வகையில் உதவ வேண்டும் என்பதை நாட்டில் நடக்கும் பல்வேறு நிகழ்வுகளைச் சுட்டிக்காட்டி ஆசிரியர்கள் மனிதநேயத்தை வளர்க்கும் விதமாக கூறிவருகிறார்கள். அதன் அடிப்படையில் மாணவர்கள் சிறுவயதிலே இதுபோன்று தானாக மனிதநேயத்தை வளர்த்து கொண்டது மகிழ்ச்சியை அளிக்கிறது. இதில் பள்ளி நிர்வாகத்தின் பங்கு ஒன்றும் இல்லை" என்றார்.