கிருஷ்ணகிரி அருகே, குடிபோதையில் படுத்துவிட்ட விடுதி சமையலரால் அரசுப்பள்ளி மாணவர்கள் பட்டினி கிடந்த அவலம் நேர்ந்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள சிங்காரப்பேட்டையில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதன் அருகில், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் கீழ் ஒரு மாணவர் விடுதியும் உள்ளது. இதில், ஐம்பதுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் தங்கி, படித்து வருகின்றனர். இந்த விடுதியின் காப்பாளராக சரவணன் (36) என்பவர் உள்ளார். சூளகிரியைச் சேர்ந்த முனிராஜ் (42), அமிர்தலிங்கம் ஆகிய இருவரும் சமையலர்களாக பணியாற்றி வருகிறார்கள்.
இரு சமையலர்களில் ஒருவரான அமிர்தலிங்கம், விடுப்பில் சொந்த ஊருக்குச் சென்று விட்டார். முனிராஜ் மட்டும் பணியில் இருந்தார். அவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருக்கிறது. கடந்த திங்கள் கிழமை (ஜன. 27), வழக்கம்போல் மது குடித்துவிட்டு போதை தலைக்கேறிய நிலையில், விடுதி அறையிலேயே பாய், தலையணை போட்டு படுத்து அயர்ந்து தூங்கிவிட்டார்.
மதிய உணவு இடைவேளையின்போது மாணவர்கள் பசியோடு வந்து பார்த்தபோது, முனிராஜ் போதையில் படுத்துக் கிடப்பதும், தங்களுக்கு உணவு சமைக்காமல் பட்டினி போட்டிருப்பதைக் கண்டும் விரக்தி அடைந்தனர். அவரை பலமுறை எழுப்ப முயன்றும் எழுந்திருக்க முடியவில்லை. பசியால் தவித்த மாணவர்கள், அவர்களாகவே தங்களுக்குத் தெரிந்த வகையில் சமைத்து, அப்போதைக்கு பசியாறினர். இதனால் பள்ளிக்குச் செல்வதில் தாமதம் ஆனது.
வகுப்பறைக்கு தாமதமாக வந்த மாணவர்களிடம் ஆசியர்கள் விசாரித்தபோதுதான், மேற்கண்ட விவரங்கள் தெரிய வந்தன. இதுபற்றி விடுதி காப்பாளருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, விடுப்பில் சென்றிருந்த சமையலர் அமிர்தலிங்கத்தை உடனடியாக பணிக்கு வரவழைத்தனர். அவர் வந்ததை அடுத்து, நேற்று வழக்கம்போல் விடுதியில் உணவு சமைத்து மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.
பணி நேரத்தில், பொறுப்பின்றி குடிபோதையில் இருந்ததோடு, மாணவர்களை பட்டினி போட்ட சமையலர் முனிராஜ் மீது துறை ரீதியான நடவடிக்கைக்கு பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.