தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று துவங்கியது. குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் விடுத்த வேண்டுகோலை சபாநாயகர் நிராகரித்தார். வண்ணாரப்பேட்டையில் போராட்டத்தின்போது நடைபெற்ற தடியடிக்கு முதல்வர் கே.பழனிச்சாமி விளக்கம் அளித்தார். தொடர்ந்து பல காரசார விவாதங்களும், வெளிநடப்புக்களும் அறங்கேறிய அதே நேரத்தில் சட்டப்பேரவையில் வழக்கமாக நடைபெறும் ஒரு சுவாரசிய நிகழ்வும் தடையின்றி நடைபெற்றது.
சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறும் நாட்களில் அதனை நேரில் காண பள்ளி,கல்லூரி மாணவர்கள் அனுமதிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் நேற்றைய தினம் சென்னை, மேற்கு மாம்பலம் பகுதியில் உள்ள அக்ஷர்-அர்போல் இண்டெர்நேஷனல் பள்ளியை சேர்ந்த மாணவிகள் சட்டப்பேரவைக்கு வந்திருந்தனர். சட்டப்பேரவை நிகழ்வுகளையும், அரசியல் பிரமுகர்களையும் நேரில் பார்த்தது சுவாரசிய அனுபவமாக இருந்ததாக மகிழ்ந்தனர்.