
சிதம்பரம் அருகே சி.முட்லூர் பகுதியில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் பயிலும் 100க்கு மேற்பட்ட மாணவிகள் அதேபகுதியில் உள்ள அரசினர் பிற்படுத்தப்பட்டோர் நலத் துறையின் விடுதியில் தங்கிக் படித்து வருகின்றனர்.
இந்நிலையில் விடுதியில் வழங்கப்படும் உணவில் பூச்சி புழுக்கள் இருப்பதாகவும், அடிப்படை வசதிகளான கழிவறை சரியாக இல்லை, கழிவறையில் இருந்த ஜன்னல் உடைந்து இருப்பதால் பழைய துணிகளை கட்டி மாணவிகள் கழிவறையை பயன்படுத்தி வருவதாகவும், விடுதியை சுற்றி சுற்றுச்சுவர் இல்லாததால் ஒரு அச்சத்தோடு விடுதியில் இருப்பதாகவும் மாணவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும் விடுதிக்குள் யார் யார் வருகிறார்கள் என்று கண்காணிக்க கண்காணிப்பு கேமராக்கள் இல்லாமல் இருப்பதாகவும் புகார் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் இதனைக் கண்டித்து இந்திய மாணவர் சங்கத்தின் தலைமையில் காலை உணவை புறக்கணித்து விடுதி நுழைவு வாயில் முன்பு தரையில் அமர்ந்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து கடலூர் மாவட்ட பிற்படுத்தப்பட்ட நலத்துறை துணை ஆட்சியர் சங்கர் விடுதிக்கு வருகை புரிந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஒரு வாரத்தில் அனைத்தையும் சரிசெய்து தருகிறோம் என உறுதி அளித்த பிறகு மதியம் 1 மணிக்கு மேல் மாணவிகள் கலைந்து சென்றனர்.
இந்நிகழ்வில் இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் சௌமியா, துணைச்செயலாளர் சிவநந்தினி உள்ளிட்ட 70-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்துகொண்டனர்.