தமிழகத்தில் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. கட்சிகளுக்கிடையே கூட்டணி, தொகுதிப் பங்கீடுகள், தேர்தல் வேட்பாளர் பட்டியல் ஆகியவை முடிந்து தேர்தல் பரப்புரை, பிரச்சாரம் என தீவிரமாக இயங்கிவருகின்றன. அவ்வப்போது சர்ச்சையாக பேசி சிக்கிக்கொள்வது அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் வழக்கம். இந்தநிலையில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில், “ஒரு சிலிண்டர் 5 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதிமுக அரசு உங்களுக்கு இலவசமாகக் கொடுக்க திட்டமிட்டுள்ளது” எனக் கூறியது பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
திண்டுக்கல்லில் பிரச்சார வாகனத்தில் நின்றுகொண்டு வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசுகையில், ''ஒரு சிலிண்டர் எவ்வளவு விலை என்பது உங்களுக்குத் தெரியும். 4,800 ரூபாய், ஏறத்தாழ ஐயாயிரம் ரூபாய். 6 சிலிண்டர்கள் ஒரு வருடத்திற்கு இலவசமாக கொடுக்கப்படும் என்ற அருமையான திட்டத்தைப் பொது மக்களுக்குக் கொடுத்திருக்கிறார்கள்'' என்றார்.