
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகிலுள்ள செண்டூர் எனும் ஊர், சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையின் அருகில் உள்ளது. இந்த ஊரைச் சேர்ந்த பழனி என்பவரது மனைவி வசந்தா (54). இவர், ஆடுகளை வளர்த்து, பராமரித்து, அதை விற்றுவரும் பணத்தில் தனது குடும்பத்தை நடத்திவருகிறார். கடந்த மாதம் 22ஆம் தேதி, இவர் தேசிய நெடுஞ்சாலை ஓரம் உள்ள வயல்வெளி பகுதியில் ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்தார்.
அப்போது அங்கு ஆட்டோவில் வந்த ஒரு பெண் உட்பட 3 பேர் கொண்ட ஒரு கும்பல், வசந்தாவிடம் ஆடுகளை விலைக்குத் தருமாறு கேட்டுள்ளனர். வசந்தா முதலில் விலைக்கு கொடுக்க மறுத்துள்ளார். ஆனால், ஆட்டோவில் வந்தவர்கள் அதிகப் பணம் தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளனர். இதையடுத்து நான்கு சிறிய ஆடுகள், ஒரு பெரிய ஆடு என மொத்தம் ஐந்து ஆடுகளுக்கும் சேர்த்து 26 ஆயிரம் ரூபாய் விலை பேசி முடித்துள்ளனர். வசந்தாவும் அந்த விலைக்கு ஆடுகளைக் கொடுப்பதற்கு ஒப்புக்கொண்டுள்ளார். இதையடுத்து அவர்கள் ரூ. 2,000 நோட்டுகளாக 26,000 ரூபாயை வசந்தாவிடம் கொடுத்துவிட்டு ஆடுகளை ஏற்றிக்கொண்டு சென்றுவிட்டனர்.
அன்று மாலை வீட்டிற்குச் சென்ற வசந்தா, ஆடுகளை விற்று 26 ஆயிரம் ரூபாய் பணம் வாங்கிக்கொண்டு வந்துள்ளதாக கூறி, அந்தப் பணத்தை தனது மகளிடம் கொடுத்து, சரியாக உள்ளதா என சரிபார்க்கச் சொல்லியுள்ளார். அப்போது அவரது மகள் அந்த 2,000 ரூபாய் நோட்டுகளைப் பார்த்து சந்தேகம் அடைந்துள்ளார். அந்தப் பணத்திலிருந்து ஒரு 2,000 ரூபாய் நோட்டைக் கொண்டு அந்த ஊரில் உள்ள ஒரு கோழிக் கடையில் கொடுத்து கோழி இறைச்சி கேட்டுள்ளார். கடைக்காரர் அந்த நோட்டை வாங்கிப் பார்த்துவிட்டு, இது கலர் ஜெராக்ஸ் நோட்டு என்று கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த வசந்தா, தான் ஏமாற்றப்பட்டதை அறிந்தார்.
உடனடியாக மயிலம் காவல் நிலையத்திற்குச் சென்று அந்த ஆட்டு வியாபாரிகள் கொடுத்த பணத்தைக் காட்டி புகார் அளித்துள்ளார். இதையடுத்து மயிலம் போலீசார், வசந்தா அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவுசெய்து, ஆடு வியாபாரத்தில் மோசடி செய்தவர்களைத் தேடிவந்தனர். இந்த நிலையில், ஆடு வாங்குவது போல் சென்ற அந்தக் கும்பல் ஆந்திரா பகுதிக்குச் சென்று மோசடியில் ஈடுபட்டு, அங்குள்ள போலீசாரிடம் சிக்கியுள்ளனர். இந்தத் தகவல் மயிலம் போலீசாருக்குத் தெரியவந்தது. உடனடியாக இங்கிருந்து ஆந்திர மாநிலம் சென்று அங்கு போலீசாரிடம் பிடிபட்ட அந்தக் கும்பலை அழைத்துவந்து விசாரித்தனர்.
அந்த விசாரணையில் அவர்கள்தான் செண்டூர் வசந்தாவிடம் 26,000 ரூபாய் கலர் ஜெராக்ஸ் நோட்டுகளைக் கொடுத்து ஆடு வாங்கிய மோசடி வியாபாரிகள் என்பது தெரியவந்தது.
இந்த மோசடியில் ஈடுபட்டவர்கள், சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த ஷேக் அயுப் (32), அவரது மனைவி பர்கத்பி (25), சென்னை, கொடுங்கையூர் பகுதியைச் சேர்ந்த அப்துல் ஷரிப் (50) ஆகிய மூவரும் என்பது தெரியவந்தது. இவர்கள் மூவரும் கலர் ஜெராக்ஸ் பணத்தைக் கொடுத்து ஏமாற்றியதை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து அவர்கள் மீது வழக்குப் பதிவுசெய்த மயிலம் போலீசார், மூவரையும் சிறையில் அடைத்துள்ளனர்.