தலைவாசல் அருகே,நீட் தேர்வில் மதிப்பெண் குறைவாக பெற்றுவிடுவோம் என்ற விரக்தியால் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.
சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே உள்ள வடகுமரையைச் சேர்ந்தவர் கணேசன். இவர் விவசாயி. இவருடைய மகன் சுபாஷ் சந்திரபோஸ் (வயது 20). தனியார் பள்ளியில் படித்து வந்த இவர், கடந்த ஆண்டு பிளஸ்2 படிப்பை முடித்திருந்தார்.
மருத்துவர் ஆக வேண்டும் என்ற கனவில் இருந்த சுபாஷ் சந்திரபோஸ், கடந்த ஆண்டு நடந்த நீட் தேர்வை முதன்முதலில் எழுதினார். அதில் 158 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றார்.
இதையடுத்து இரண்டாவது முறையாக கடந்த செப்டம்பர் மாதம் நடந்த நீட் தேர்வை எழுதினார். இதில், இயற்பியல் பாடப்பிரிவில் இருந்து கேட்கப்பட்ட கேள்விகள் கடினமாக இருந்ததாகவும், அதனால் இந்தமுறையும் தன்னால் எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெற முடியாது என்றும் அடிக்கடி புலம்பி வந்துள்ளார்.
இந்நிலையில் தேர்வு முடிவுகள் கடந்த நவம்பர் 2- ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதில், எத்தனை மதிப்பெண் பெற்றோம் என்று கூட பார்க்காத சுபாஷ் சந்திரபோஸ், பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
இதையறிந்த பெற்றோர் பதறியடித்துக் கொண்டு, அவரை உடனடியாக ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதல்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சைப் பலனின்றி சனிக்கிழமை (நவ. 6) காலை சுபாஷ் சந்திரபோஸ் உயிரிழந்தார்.
இதற்கிடையே அவர் நீட் தேர்வில் 261 மதிப்பெண்கள் பெற்றிருந்தது தெரிய வந்தது. இச்சம்பவம் குறித்து தலைவாசல் காவல்நிலைய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நீட் தேர்வு நடந்த அன்றும், அதற்கு அடுத்த நாளும் ஓரிரு மாணவர்கள் நீட் தேர்வு மீதான அச்சம் காரணமாக தற்கொலை செய்திருந்தனர். இந்நிலையில் நீட் தேர்வு வெளியான பிறகும் மேலும் ஒரு இளைஞர் நீட் தேர்வினால் தற்கொலை செய்த சம்பவம் தலைவாசல் சுற்றுவட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.