திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டம், காளாஞ்சிபட்டி யில் செயல்பட்டு வரும் கலைஞர் நூற்றாண்டு ஒருங்கிணைந்த போட்டித் தேர்வு பயிற்சி மையத்தில் ரூ.10.லட்சம் மதிப்பீட்டில் நூலகத்திற்கு புத்தகங்கள், கணினி மற்றும் மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி கையேடுகளை உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி இலவசமாக வழங்கினார்.
இதில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி பேசும் பேசுகையில், ''தமிழ்நாடு முதலமைச்சர் தமிழக இளைஞர்களின் எதிர்கால நலனை கருத்தில்கொண்டு, இளைஞர்களின் அரசுப் பணி என்ற உயரிய இலட்சியக் கனவை நினைவாக்கும் வகையில், ஒன்றிய மற்றும் மாநில அரசுப் பணிக்கான தேர்வுகளில் நகரம் மற்றும் கிராமப்புறங்களை சேர்ந்த தமிழக இளைஞர்கள் தன்னம்பிக்கையுடனும், முழு தகுதியுடனும் அதிகமானோர் பங்கேற்றிட வழிகாட்டிட வேண்டும் என்ற உயரிய எண்ணத்தில் கலைஞர் நூற்றாண்டு ஒருங்கிணைந்த போட்டி தேர்வு பயிற்சி மையம் அமைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டம், காளாஞ்சிபட்டி யில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நுாற்றாண்டு ஒருங்கிணைந்த போட்டி தேர்வு பயிற்சி மையத்தை சென்னையில் இருந்து காணொலி காட்சி வாயிலாக 27.02.2024 அன்று துவக்கி வைத்தார்கள். இந்த போட்டித்தேர்வு பயிற்சி மையம் ரூ.10.15 கோடி மதிப்பீட்டில் 4 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. பயிற்சி மைய தரை தளத்தில் 2 பயிற்சி வகுப்பறைகள், பணியாளர் அறை, பயிற்றுநர் அறை, கணினி ஆய்வகம், நூலகம், வாகனங்கள் நிறுத்துமிடம், ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனி கழிப்பறைகள், தரைதளத்தில் 1000 நபர்கள் அமரும் வசதி கொண்ட குளிரூட்டப்பட்ட கருத்தரங்கு கூடம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.
முதல் தளத்தில் கணினி நூலகம், ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக உணவருந்தும் கூடம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. மாணவ, மாணவிகளுக்கு தேவையான இருக்கை வசதிகள், 1000 மாணவ, மாணவிகள் அமர்ந்து பயிற்சி பெறும் வகையில் மேஜை, நாற்காலிகள் உள்ளிட்ட தளவாட சாமான்கள், உட்புற சாலை வசதிகள், இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடம், சுற்றுச்சுவர் மற்றும் தடுப்புச் சுவர் வசதிகள், நுழைவு வாயில், குடிநீர் வசதிகள், புல் வெளி மற்றும் தோட்ட அலங்காரம் போன்றவற்றுடன் பாதுகாப்பான சூழலில் படிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த பயிற்சி மையத்தில் தற்போது 175 மாணவ, மாணவிகள் பயிற்சி பெற்று வருகின்றனர். மாணவ, மாணவிகளுக்கு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம், ஆசிரியர் பயிற்சி தேர்வாணையம், தமிழ்நாடு அரசு சீருடைப் பணியாளர் தேர்வாணையம், ரயில்வே துறை, வங்கி துறை உட்பட அரசுப் பணிகளுக்கான அனைத்து போட்டித் தேர்வுகளுக்கும் சிறந்த வல்லுநர்களை கொண்டு பயிற்சி அளிக்கப்படுகிறது.
மேலும் புதன்கிழமை மற்றும் சனிக்கிழமை என வாரத்தில் 2 நாட்கள் மாதிரித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இந்த மாதிரித் தேர்வுகளுக்கான வினாத்தாள்கள் சிறந்த வல்லுநர்களைக் கொண்டு தயார் செய்யப்பட்டு வழங்கப்படுகிறது. போட்டித்தேர்வு நடப்பது போலவே முறையாக நேரம் நிர்ணயிக்கப்பட்டு மாதிரித்தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இதன்மூலம் மாணவ, மாணவிகள் குறித்த நேரத்தில் தேர்வை எழுதி முடிக்கவும், பதட்டமின்றி தேர்வு எழுதவும் வழிவகை ஏற்பட்டுள்ளது. இங்குள்ள மாணவ, மாணவிகள் பயிற்சி பெறுவதற்கு வசதியாக கணிதம் தொகுதி-1 மற்றும் கணிதம் தொகுதி-2, பொதுத்தமிழ் தொகுதி-1 மற்றும் பொதுத்தமிழ் தொகுதி-2 என 175 மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ.1700 மதிப்பீட்டிலான பயிற்சி கையேடுகள், நூலகத்திற்கு புத்தகங்கள் மற்றும் கணினி என மொத்தம் ரூ.10.00 லட்சம் மதிப்பீட்டிலான புத்தகங்கள் மற்றும் கணினி இன்று இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தொகுதி-4 பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு 09.06.2024 அன்று நடைபெற்றது. அந்த தேர்வுக்கு இங்கு நடைபெற்ற பயிற்சி வகுப்பில் 150-க்கும் அதிகமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். இந்த பயிற்சி மையம் பிரதான சாலை பகுதியில் அமைந்துள்ளதால், போக்குவரத்து வசதிகள் உள்ளதால் போட்டித் தேர்வுக்கு தயாராகும் படித்த இளைஞர்கள் இந்த பயிற்சி மையத்திற்கு சிரமமின்றி வந்து செல்ல முடிகிறது. பயிற்சி மையத்திற்கு ஆய்வுக்கு வந்தபோது, படிப்பதற்கு கூடுதல் புத்தகங்கள், கையேடுகள், பயிற்சியளிக்க கூடுதல் ஆசிரியர்கள் தேவை என மாணவ, மாணவிகள் கோரிக்கை விடுத்தனர். அதன்படி, புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன. பயிற்சியளிக்க கூடுதல் ஆசிரியர்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், மாணவ, மாணவிகள் தங்கி படிப்பதற்கு வசதியாக இங்கு விடுதி கட்டப்படவுள்ளது. இங்கு படிக்கும் மாணவ, மாணவிகள் நன்றாக பயிற்சி பெற்று போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்று அதிக எண்ணிக்கையிலான மாணவ, மாணவிகள் அரசுப் பணிகளுக்கு செல்ல வேண்டும். அப்போதுதான், கிராமப்புற மாணவ, மாணவிகள் இந்த பயிற்சி மையத்தை நாடி பயன்பெற ஊக்கம் ஏற்படும். எனவே, ஊரகப் பகுதியில் வசிக்கும் போட்டித்தேர்வுக்கு தயாராகும் படித்த இளைஞர்கள் இந்த பயிற்சி மையத்தை நல்ல முறையில் பயன்படுத்தி, போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்று, அரசுப் பணிகளில் இணைந்து தங்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்ள வேண்டும்'' என்றார்.