Skip to main content

அரசு மருத்துவக் கல்லூரியில் தனியார் கல்விக் கட்டணத்தைக் கேட்டதால் மாணவர்கள் போராட்டம்!

Published on 31/03/2022 | Edited on 31/03/2022

 

Students protest over private tuition fees at Government Medical College

 

கடலூர் மாவட்டம், சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரியில் பயிலும் மருத்துவ மாணவர்கள் மற்ற அரசு மருத்துவக் கல்லூரியில் வசூலிக்கும் கல்விக் கட்டணத்தை வசூலிக்க வேண்டும் என்று கடந்த ஆண்டுத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

அதன் விளைவாகத் தமிழக அரசு அரசாணை வெளியிட்டு தற்போது பயிலும் மாணவர்களுக்கு (2021 -2022) மற்ற அரசுக் கல்லூரிகள் போன்று கல்விக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. இந்த கல்லூரியைக் கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரியாகப் பெயர் மாற்றமும் செய்தது தமிழக அரசு. இருப்பினும், அரசாணை 45 வெளியிட்ட பிறகும்  தனியார் மருத்துவக் கல்லூரிகள் போன்று கல்வி கட்டணம் செலுத்த கல்லூரி நிர்வாகம் சார்பில் வற்புறுத்தப்பட்டது.

 

இதனைத் தொடர்ந்து தி.மு.க. தலைமையிலான அரசுப் பொறுப்பேற்றப் பிறகு, உயர்கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்கள், மருத்துவ மாணவர்களைச் சந்தித்தபோது தற்போது பயிலும் மாணவர்களுக்கு 2021-2022 கல்வி ஆண்டிலிருந்து அரசு கட்டணம் தான் வசூலிக்கப்படும் என்று உறுதி அளித்தனர். 

 

ஆனால், இதற்கு நேர்மாறாக, G.O 204 வெளியிடப்பட்டு, மற்ற தனியார் கல்லூரி  கட்டணம் ரூபாய் 4 லட்சம் நிர்ணயிக்கப்பட்டது. அது முன்பு நிர்ணயம் செய்யப பட்ட அரசு கட்டணத்திற்கு ரூபாய் 13, 600- க்கு எதிராக வெளியிடப்பட்டது. இதுகுறித்து மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

இதனையறிந்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மற்றும் சுகாதாரத்துறைச் செயலாளர் ஆகியோருடன் மருத்துவ மாணவர்கள் கலந்துக் கொண்ட ஆலோசனை கூட்டம், கடந்த ஐந்து மாதத்திற்கு முன்பு சென்னையில் நடைபெற்றது. அதில் மற்ற அரசு மருத்துவக் கல்லூரிகள் போன்று கட்டணமாக ரூபாய் 13,610  மற்றும் சலுகைகள் வழங்கபடும் என்று உறுதி அளிக்கப்பட்டது. 

 

ஆனால் தற்போது கட்டணம் தொடர்பான கோப்பு நிதி துறையில் பரிசீலனையில் உள்ளது. இதற்கிடையில், கல்லூரி நிர்வாகம்  சுற்றரிக்கை வெளியிட்டு, மார்ச் 30- க்குள் தனியார் கல்லூரி கட்டணம் செலுத்த மருத்துவ மாணவர்களுக்கு நிர்பந்தம் செய்துள்ளது, செலுத்தத் தவறினால் வகுப்புகள் செல்ல அனுமதிக்கபட மாட்டோம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

 

இதனால் இன்று (31/03/2022) மருத்துவக் கல்லூரி வாயிலில் 700- க்கும் மேற்பட்ட அனைத்து நிலை மருத்துவ மாணவர்கள் வகுப்பைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு மணி நேரம் நடைபெற்ற போராட்டத்தில் கல்லூரி நிர்வாகம் தரப்பில் ஒரு வாரம் அவகாசம் வழங்கியுள்ளனர். மேலும் அதற்குள் அரசிடம் பேசி நல்ல முடிவு எடுக்கபடும் என்று மருத்துவ மாணவர்களுக்கு உறுதி அளிக்கப்பட்டது. 

 

இதையடுத்து, மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டனர். மருத்துவ மாணவர்களின் திடீர் போராட்டதால் மருத்துவனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. 

 

சார்ந்த செய்திகள்