ஜனவரி மாதம் பொங்கல் வரவிருக்கும் நிலையில், 'ஜல்லிக்கட்டு' நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு கடந்த மாதம் 26-ஆம் தேதி வெளியிட்டிருந்தது. இந்நிலையில் தற்பொழுது மதுரையில் ஜல்லிக்கட்டு நடத்தப்படும் இடங்கள் மற்றும் தேதிகள் மதுரை ஆட்சியர் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜல்லிக்கட்டுக்கு பெயர்போன உலகப்புகழ் பெற்ற மதுரை அலங்காநல்லூரில் வரும் ஜனவரி 16-ஆம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெற இருக்கிறது. ஜன.14-ஆம் தேதி அவனியாபுரத்திலும், ஜன.15-ஆம் தேதி பாலமேட்டிலும் ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது.
ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியில் அதிகபட்சமாக 300 நபர்கள் மட்டுமே கலந்துகொள்ள வேண்டும். எருது விடும் நிகழ்ச்சியில்,150 வீரர்களுக்கு மிகாமல் பங்கேற்க வேண்டும். ஜல்லிக்கட்டு போட்டிகளைக் காண்பதற்காக 50% பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். அந்த 50 சதவீதத்தினரும் வெப்பப் பரிசோதனைக்குப் பின்னரே அனுமதிக்கப்படுவர். மாடுபிடி வீரர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டு கரோனா இல்லை என்பதற்கான சான்று கட்டாயம். அதேபோல் ஜல்லிக்கட்டு நிகழ்வில் முகக் கவசம், தனிமனித இடைவெளி போன்றவற்றைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளையுடன், காளையின் உரிமையாளர் மற்றும் உரிமையாளரின் உதவியாளர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். அவர்களுக்கும் கரோனா பரிசோதனை செய்யப்படும்.
ஜல்லிக்கட்டு நடப்பதற்கு ஏழு நாட்களுக்கு முன்பே வீரர்கள் முன்பதிவு செய்து அதற்கான அடையாள அட்டையைப் பெற்றுக் கொள்ள வேண்டும். கரோனா விதிமுறைகளை மீறுபவர்கள் உடனடியாக அரங்கில் இருந்து வெளியேற்றப்படுவர் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.