ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வந்திருந்த மக்கள் தங்களது பிரச்சினை குறித்து ஆட்சியரிடம் மனுக்களை வழங்கினர்.
அப்போது ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த பள்ளபாளையம் பேரூராட்சி, தங்கமேடு, வார்டு 1 பகுதி சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் இன்று தங்களது பெற்றோர்களுடன் ஆட்சியரைச் சந்தித்து மனுக்கள் வழங்கினர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:- எங்கள் பகுதியில் வசிக்கும் பள்ளி மாணவ மாணவிகள் கல்லூரி மாணவ மாணவிகள் வேலைக்குச் செல்பவர்கள் பேருந்து நிலையத்திற்கு மூன்று கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. பள்ளி மாணவிகள் வேலைக்குச் செல்லும் பெண்கள் பேருந்து நிலையத்திற்குச் செல்லும் வழியில் பல்வேறு இடர்பாடுகளைச் சந்திக்க வேண்டி உள்ளது. இதனால் அவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர்.
மேலும் தனியாகச் செல்ல அச்சப்படுகின்றனர். எனவே பலமுறை பேருந்து வசதி வேண்டி விண்ணப்பித்து இருந்தோம். பள்ளி செல்லும் மாணவ மாணவிகள் பல்வேறு இடர்பாடுகளைச் சந்தித்து வருவதால் மன உளைச்சலில் உள்ளனர். மேலும் பள்ளிக்குத் தாமதமாகச் செல்கின்றனர். எனவே இதைத் தவிர்க்கும் வகையில் ஈரோடு - கவுந்தப்பாடி வழித்தடத்தில் செல்லும் பேருந்து எண் 8 மற்றும் 7 ஆகிய பேருந்து ஏதாவது ஒரு பேருந்தைக் காலை மற்றும் மாலை நேரங்களில் தங்கமேடு பகுதிக்கு வந்து செல்லுமாறு ஆவணம் செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் அதில் கூறியுள்ளனர்.