குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்படுவர் என முதல்வர் தெரிவித்தார் என மாணவியின் தாயார் செல்வி கூறியுள்ளார்.
இன்று சென்னையில் தலைமைச் செயலகத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை மாணவியின் தாயார் செல்வி, தந்தை ராமலிங்கம், சகோதரர் சந்தோஷ் ஆகியோர் நேரில் சந்தித்தனர். அப்போது முதலமைச்சர் அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்து, சட்டப்படி நியாயமான நடவடிக்கைகளை அரசு எடுக்கும் என்று உறுதியளித்தார்.
இது குறித்து செல்வி செய்தியாளர்களுக்கு அளித்த பெட்டியில் "எனது மகள் மரணத்தில் குற்றவாளிகள் தப்பக்கூடாது என முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளோம். விசாரணை வேகமாக நடந்து குறுகிய காலத்தில் வழக்கை முடிக்க கோரிக்கை விடுத்துள்ளோம். கலவரத்தில் ஈடுபடாத பள்ளி மாணவர்கள் பலரை கைது செய்துள்ளனர் அவர்களுக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லாததால் அவர்களை விடுவிக்க கேட்டுள்ளோம் . குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்படுவர் என முதல்வர் கூறினார். பிரேத பரிசோதனை தொடர்பான வீடியோ பதிவு மற்றும் பரிசோதனை அறிக்கை ஏதும் எங்களிடம் தரப்படவில்லை. எங்களிடம் முதல் பரிசோதனை மற்றும் இரண்டாம் பரிசோதனை அறிக்கை மட்டுமே தந்தனர். ஜிப்மர் அறிக்கை எங்களிடம் இன்னும் தரப்படவில்லை.
முதல் இரண்டு உடற்கூறு ஆய்வுகளிலும் சில விஷயங்கள் மறைக்கப்பட்டு தான் உள்ளன. பள்ளி நிர்வாகம் தற்போது வரை சிசிடிவி காட்சிகளை இன்னும் காட்டவில்லை. குற்றவாளிகளாக கைது செய்யப்பட்ட ஐந்து பேர் ஜாமீனில் வெளியில் வந்தாலும் குற்றமற்றவர் என நிரூபிக்கப்படவில்லை. சிபிசிஐடி காவல் துறையினர் , எங்கள் சந்தேகங்களை தீர்க்க வேண்டும் மேலும் புதிதாக ஏதும் கண்டுபிடித்தார்கள் எனில் பெற்றோர் என்ற முறையில் எங்களுக்கு முதலில் தெரிவிக்க வேண்டும். மாணவியுடன் படித்த மாணவர் ஆஜர் ஆகியுள்ளார் என சிபிசிஐடியால் சொல்லப்படுகிறதே தவிர எனக்கு அவர்கள் யார் எனத் தெரியாது " எனக் கூறினார்.