சேலம் மாவட்டம், மேட்டுர் வட்டம், மேச்சேரி அருகே மாதநாயக்கன்பட்டியில் உள்ள பெருந்தலைவர் காமராசர் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளியின் தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் தலைவர் தலைமை ஆசிரியர் சந்திரசேகரன். மன்றத்தில் பொறுப்பு ஆசிரியர்களாக அன்பரசி, விஜயகுமார் உள்ளனர்.
இப்பள்ளியில் இருந்து 2 கி.மீ தொலைவில் ஒரு வயலில் பாறையில் ஒரு கல்வெட்டு இருப்பதாக பள்ளி மாணவர்கள் கொடுத்த தகவலின்படி ஆசிரியர்களும், மாணவர்களும் களப்பயணம் சென்று ஆய்வு செய்துள்ளனர்.
இது குறித்து தலைமை ஆசிரியர் சந்திரசேகரன் கூறும் போது, பள்ளி மாணவர்கள் கொடுத்த தகவலின் பேரில் தொன்மை பாதுகாப்பு மன்றம் சார்பில் மாணவர்களுடன் களப்பயணம் செய்து பார்த்த போது வயல்வெளியில் சிறிய பாறையில் அந்த கல்வெட்டு காணப்பட்டது எழுத்துகளைப் பார்த்த போது அது 17 ஆம் நூற்றாண்டை சேர்ந்த தமிழ் கல்வெட்டு என்பதை அறிய முடிந்தது.
தொடர்ந்து ஆசிரியர் அன்பரசி, கல்வெட்டுப்படி எடுத்து ஆய்வு செய்து பார்த்த போது 17 ஆம் நூற்றாண்டை சேர்ந்த தமிழ் கல்வெட்டு அமைந்துள்ள பாறை 3 அடி நீளமும் , 2.5 அடி அகலமும் உடையது. 3 வரிகள் எழுதப்பட்டிருந்தது. அந்த கருங்கல் பாறையில் சூலம் போன்ற அமைப்பும், அதன் அருகில் மூன்று வரியில் 1.ஸ்ரீ கயிலா, 2. ய நா, 3. தர் என்ற வாசகம் அதாவது ‘கயிலாயநாதர்’ என்ற முழு வாசகம் தெரியவந்துள்ளது.
யாரோ சிவபக்தர் இந்த பாறையில் கல்வெட்டாக எழுதி இருக்கலாம் என்பது தெரிகிறது. தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் சார்பாக தொல்லியல் சார்ந்த வரலாற்று தகவல்களையும், அதனை பற்றிய விழிப்புணர்வையும் இன்றை இளைய தலைமுறை மாணவர்களுக்கு கொண்டு சேர்ப்பது தான் தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் நோக்கமாகும் அதனால் தான் மாணவர்களையும் களப்பயணமாக அழைத்து வந்தோம் என்றார்.