அக்டோபர்-1 ந்தேதி முதல் பள்ளிகளுக்கு சென்று மாணவர்கள் தங்களின் சந்தேகங்களுக்கு தீர்வு காணலாம் என பள்ளிக்கல்வி துறை அறிவித்திருந்த அரசாணையை திடீரென்று இன்று நிறுத்தி வைத்திருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. இதனால் பெற்றோர்களும் மாணவ-மாணவிகளும் குழப்பமடைந்துள்ளனர்.
தளர்வுகளுடன் கூடிய நான்காம் கட்ட பொது முடக்கம் 30-ந்தேதி முடிவடையும் சூழலில், அக்டோபர் 1 முதல் 10,11,12 ஆகிய வகுப்புகளின் மாணவ-மாணவிகள் அவரவர் பள்ளிகளுக்கு சென்று பாடம் தொடர்பான சந்தேகங்களுக்கு தீர்வு காணலாம் என கடந்த வாரம் அறிவித்திருந்தது பள்ளிக்கல்வித் துறை.
கடந்த சில வாரங்களாக ஆன்லைன் க்ளாஸ்களை தொடர்ச்சியாக பள்ளிகள் நடத்தி வருகின்றன. ஆன் லைன் க்ளாஸ்களில் பாடம் தொடர்பான புரிதலில் சிக்கல்கள், சந்தேகங்களுக்கு தீர்வு கிடைக்காதது என பல்வேறு பிரச்சனைகளை மாணவர்கள் எதிர்கொண்டு வருகின்றனர். இது தொடர்பான, புகார்கள், பள்ளிக்கல்வித்துறைக்கு சென்றதால்தான், பள்ளிகளுக்குச் சென்று சந்தேகங்களை தீர்த்துக்கொள்ளலாம் என அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
இந்த நிலையில், பொது முடக்கத்தில் மேலும் தளர்வுகள் கொடுக்கப்பட வேண்டுமா? அல்லது தற்போதைய நிலையே நீடிக்க வேண்டுமா? என்பது உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் இன்று விரிவான ஆலோசனை நடத்தி முடித்திருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
இனி அடுத்தடுத்து வரும் மாதங்களில் பண்டிகைகள் அதிகம் வரவிருப்பதால் கூடுதல் தளர்வுகளுடன் ஐந்தாம் கட்ட பொதுமுடக்கத்தை அமல்படுத்தலாமா? அமல் படுத்தினால் எந்தெந்த துறைகளுக்கு தளர்வுகள் அளிப்பது? என்கிற ஆலோசனையை நடத்தியிருக்கிறது மத்திய அரசு. அதனால், மத்திய அரசின் முடிவுகளை தெரிந்துகொண்டு அதற்கேற்ப முடிவுகளை எடுக்க நினைக்கிறது எடப்பாடி அரசு. அதேசமயம், மருத்துவ குழுவினருடன் ஆலோசனை நடத்தியப் பிறகு தமிழகத்தின் நலன் கருதியும் சில முடிவுகளை எடுக்க வேண்டும் என விரும்புகிறாராம் எடப்பாடி.
இந்த நிலையில், “பள்ளிகளுக்கு சென்று சந்தேகங்களை தீர்த்துக்கொள்ளலாம் என்கிற அரசாணை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது’’ என அறிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி, “பெற்றோர்களின் கருத்துகளையும், மருத்துவர்களின் ஆலோசனையையும் கேட்டறிந்த பிறகே பள்ளிகள் திறப்பது குறித்து முடிவெடுக்கப்படும்’’ என்றும் தெரிவித்திருக்கிறார்.
“பள்ளிக்கல்வி விசயத்தில் துறை சார்ந்து எடுக்கப்படும் முடிவுகளும் அரசு சார்ந்து எடுக்கப்படும் முடிவுகளும் அடிக்கடி முரண்படுவதால் பெற்றோர்களும் மாணவர்களும் மன உளைச்சல்களுக்கும் குழப்பங்களுக்கும் ஆட்படுகிறார்கள்” என்கின்றனர் கல்வியாளர்கள்.