Skip to main content

நிர்மலா சீதாராமன்களாக மாற்றப்படும் சென்னை பள்ளி மாணவர்கள்

Published on 16/02/2020 | Edited on 16/02/2020


மாநகராட்சி நிர்வாகத்தால் நடத்தப்படும் சென்னை பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது. இதனை ‘அட்சய பாத்ரா’ என்கிற தனியார் தொண்டு நிறுவனத்தின் கீழ் செயல்படுத்துகிறார்கள். அட்சய பாத்ரா என்பது இஸ்கான் (ISKCON) என்ற அமைப்பின் துணை நிறுவனமாகும்.  இந்தியாவின் பல பகுதிகளிலும் இந்த அமைப்பின் சார்பில் இத்திட்டம் அரசு உதவியுடன் செயல்படுத்தப்படுகிறது.

சென்னையைப் பொறுத்தவரை, அட்சய பாத்திரத்துக்காக க்ரீம்ஸ் சாலையில் 20ஆயிரம் சதுர அடி இடம் ஒதுக்கித் தரப்பட்டுள்ளது. பெரம்பூர்  பேரக்ஸ் ரோடு பகுதியில் மேலும் 35 ஆயிரம் சதுர  அடியை முதலமைச்சர் ஒதுக்கியுள்ளார். தொடக்க விழாவில், ஆளுநர் தனது நிதியிலிருந்து 5 கோடி ரூபாய் வழங்கியுள்ளார்.

 

 Students of Chennai School who are converted into Nirmala Sitharamans


பள்ளிகளில் உணவு வழங்குவது என்பதில் தமிழ்நாடு முன்னோடியான மாநிலமாகும். 1920ஆம் ஆண்டு நீதிக்கட்சி ஆட்சியில் இருந்தபோது சென்னை மாநகராட்சிப் பள்ளியில் மதிய உணவு வழங்கப்பட்டது. பெருந்தலைவர் காமராஜர் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் தமிழ்நாடு முழுவதும் அரசுப்பள்ளிகள்-உதவி பெறும் பள்ளிகளில் மதிய உணவுத் திட்டம் கொண்டு வரப்பட்டது. மக்கள்திலகம் எம்.ஜி.ஆர். தலைமையிலான ஆட்சிக்காலத்தில் அது சத்துணவுத் திட்டமாக மாற்றப்பட்டு, விரிவாக்கமும் செய்யப்பட்டது. கலைஞர் தலைமையிலான தி.மு.க. ஆட்சியில் சத்துணவில் முட்டை வழங்கப்பட்டு மாணவ-மாணவியரின் உடல்நலனுக்கு ஊட்டம் அளிக்கப்பட்டது. ஜெயலலிதா ஆட்சியில்  கலவை சோறு அளிக்கும் திட்டமும் கொண்டு வரப்பட்டது.

இப்படி ஒவ்வொரு ஆட்சிக்காலத்திலும் தமிழ்நாட்டின் உணவுப்பழக்கத்தை அடிப்படையாகக் கொண்டு தமிழக ஆட்சியாளர்கள், அரசின் பொறுப்பில் இத்திட்டத்தை செயல்படுத்தி, அதற்கான சமையல் கூடம், பாத்திரங்கள், பணியாளர்கள் ஆகியோரை நியமித்து வேலைவாய்ப்பையும் உருவாக்கியுள்ளனர். எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அ.தி.மு.க ஆட்சியில், மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் புதிய திட்டத்தை அரசாங்கம் மேற்கொள்ளாமல் வேறொரு அமைப்பிடம் வழங்கியிருப்பது பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

 

 Students of Chennai School who are converted into Nirmala Sitharamans


இஸ்கான் அமைப்பு அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் மதப்பிரச்சார அமைப்பாகும். இதன் உணவுப் பழக்கத்தில் சைவ உணவுக்கு மட்டுமே இடம் உண்டு. சைவ உணவிலும் வெங்காயம், பூண்டு ஆகியவற்றைக் கண்டிப்பாக சேர்ப்பதில்லை. அவை உணர்வுகளைத் தூண்டக்கூடியவை என்றும் அதனால் மாணவர்களின் கவனம் சிதறும் என்றும் காரணம் சொல்கிறது அட்சய பாத்ரா.

தமிழர்களின் உணவுப் பழக்கத்தில் பூண்டு, மிளகு, வெங்காயம் உள்ளிட்டவை தவிர்க்க முடியாதவையாக இருக்கின்றன. அவை உணவின் சுவையை கூட்டுவதுடன், மருத்துவ முறையிலும் நலன் விளைவிக்கின்றன. ஆனால், இஸ்கான் அமைப்பின் அட்சயப் பாத்திரம் திட்டத்தில் அவை முற்றிலுமாகத் தவிர்க்கப்படுகின்றன.

கர்நாடக மாநிலத்தில் இந்த அமைப்பினர் இதே வகையில் உணவு தயாரித்து மாணவர்களுக்கு வழங்கி வருகின்றனர். அங்குள்ள பிள்ளைகள், சுவை பிடிக்காத காரணத்தால் இந்த உணைவ சாப்பிடாமல் கீழே கொட்டிவிட்டு, வகுப்புக்குச் செல்வதும், வகுப்பறையில் சோர்வாகி மயங்கிவிடுவதும் அண்மையில் பெரும் சிக்கலை உண்டாக்கியது. அந்த மாநிலத்தில் பல தொண்டு நிறுவனங்கள் இத்திட்டத்தில் பங்கேற்றுள்ளன. மாநில அரசு சொல்லும் உணவுப்பொருட்களை அவை தனது சமையலில் சேர்க்கின்றன. ஆனால், அட்சய பாத்ரா மட்டும் அரசு சொல்லியும் சேர்ப்பதில்லை. அதனால், இத்திட்டத்தை மாற்றி வேறு அமைப்பினரிடம் இதனை வழங்க வேண்டும் என அம்மாநிலத்தில் கோரிக்கைகள் வலுவடைந்தன. ஆனால், மத்திய ஆட்சியாளர்களிடம் செல்வாக்காக உள்ள இஸ்கான் அமைப்பு, வெங்காயம்-பூண்டு இல்லாத சமையலைத் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

 

 Students of Chennai School who are converted into Nirmala Sitharamans

 

தமிழ்நாட்டில் பள்ளிகளில் உணவு சமைப்பதற்கான அத்தனை கட்டமைப்புகளும் உள்ள நிலையில், தமிழ்நாட்டு உணவுமுறைக்கு மாறான திட்டத்தை தனியார் நிறுவனம் மூலம் நிறைவேற்றுவது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. வருங்காலத்தில் மதிய நேர சத்துணவுத் திட்டத்தையும் அரசு தன் பொறுப்பிலிருந்து கைவிட்டு, இதுபோன்ற தனியார் அமைப்பிடம் ஒப்படைத்து, முட்டை உள்ளிட்ட சத்தான உணவுகளைத் தவிர்த்துவிடுமோ என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

 அண்மையில், வெங்காய விலையேற்றம் குறித்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பியபோது, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தனது உணவில் வெங்காயம்-பூண்டு சேர்ப்பதில்லை என தனது சமூகத்தின் உணவுப் பழக்கத்தின் அடிப்படையில் பதிலளித்தார்.

மாநகராட்சி நிர்வாகத்தில் உள்ள சென்னைப் பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவியரை நிர்மலா சீதாராமன்களாக மாற்ற நினைக்கிறதோ பா.ஜ.க.வுக்கு விசுவாசம் காட்டுகிற எடப்பாடி அரசு?

 

 

சார்ந்த செய்திகள்