Skip to main content

ஜெயலலிதாவிற்காக உயிரைக் கொடுத்த அ.தி.மு.க தொண்டனின் குடும்பம்; கிழிந்த சேலைகளே சுவர்களாய்... நன்றாய் படித்தும் படிக்க வழியில்லாமல் நிற்கிறார்கள்...

Published on 13/05/2019 | Edited on 13/05/2019

ஜெயலலிதா முதல்வர் பதவி ஏற்க முடியவில்லை என்பதை நினைத்தே மாரடைப்பால் மரணம் அடைந்த அ.தி.மு.க வின் உண்மை தொண்டனின் குடும்பம் இன்று சின்ன சின்னக் குழந்தைகளுடன் நாதியற்று நிற்கிறது. 

 

murugan

 

புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் ஒன்றியம் கீரமங்கலம் அருகில் உள்ள குளமங்கலம் வடக்கு கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் (40) எலக்ட்ரீசியன். 2015 காலகட்டத்தில் சொத்துக்குவிப்பு வழக்கில் சிக்கல் ஏற்பட்ட நிலையில் ஜெயலலிதா முதலமைச்சர் ஆக முடியாமல் தவித்துக் கொண்டிருந்த நேரத்தில் அ.தி.மு.க தொண்டர்கள் பல்வேறு முடிவுகளை எடுத்தனர். அப்படிதான் மே 21 ந் தேதி காலை அதே பகுதியில் உள்ள ஒரு டீ கடையில் நடந்த ஜெயலலிதா பற்றிய காரசார விவாதத்தைப் பார்த்துக் கொண்டிருந்த ஜெயலலிதாவின் விசுவாசி முருகன் நெஞ்சுவலியால் விழுந்தார். அக்கம் பக்கத்தினர் மற்றும் மாஜி ஊராட்சி மன்றத் தலைவர் தயாளன் உள்பட பலரும் முருகனை மீட்டு அருகில் இருந்த அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அதற்குள் முருகன் மரணமடைந்திருந்தார். ஜெயலலிதாவுக்காக உயிரை கொடுத்த முருகனுக்கு அ.தி.மு.க.வினர் அ.தி.மு.க கொடியை போர்த்தி அஞ்சலி செலுத்தினார்கள்.

 

murugan

 

கட்சி தலைமை முருகன் குடும்பத்திற்கு ரூ. 3 லட்சம் நிதியும், குழந்தைகளின் படிப்பு செலவையும் ஏற்கும் என்று அந்த நேரத்தில் அ.தி.மு.க நிர்வாகிகள் சொல்லிச் சென்றுள்ளனர். நான்கு வருடங்கள் ஓடிவிட்டது. தற்போது முருகனின் மூத்த மகள் பிளஸ் டூ-வில் 404 மார்க் வாங்கிவிட்டு மேலே படிக்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார். அடுத்து உள்ள 10 வயது இரட்டைக்குழந்தைகள் 6-ம் வகுப்பு போக தயாராக உள்ளனர். கூலி வேலைக்கு செல்லும் தாயால் எதுவும் செய்ய முடியாமல் முடங்கிக் கிடக்கிறார்.
 

இதுகுறித்து முருகனின் மனைவி கூறும்போது, “அம்மா அம்மான்னு உயிரை விடுவார். ஒரு நாள் அம்மா ஜெயலலிதா பதவி ஏற்க முடியாம செய்றாங்கன்னு சொல்லிக்கிட்டு இருந்தவர். கடைக்கு டீ குடிக்க போனார். டீ குடிச்ச கையோட மாரடைப்பு வந்து விழுந்து இறந்துட்டாரு. அ.தி.மு.க.காரங்க வந்து கொடி போர்த்திட்டு ரூ. 3 லட்சம் நிதி வரும்னு சொல்லிட்டு போனாங்க. இதுவரை அவங்களும் வரல. நிதியும் வரல. அம்மாவுக்காக உயிரை விட்டவருக்கு அவங்க கொடுக்க சொன்ன நிதியை கூட கொடுக்கல. 3 சின்னப் பிள்ளைகளை வச்சுக்கிட்டு ரொம்ப கஷ்டப்படுறேன். கஜா புயல் வந்தப்ப வீட்டு மேல இருந்த சிமென்ட் சீட் எல்லாம் உடைஞ்சு போச்சு. கொட்டுற மழையில அடிக்கிற காத்துல 4 பேரும் கட்டிபிடிச்சுக்கிட்டு உக்காந்திருந்தோம். 3 மாசம் கழிச்சு ஒரு தொண்டு நிறுவனம் சிமென்ட் சீட் வாங்கி கொடுத்தாங்க. அதை தான் மேல் கூரையா போட்டு சுற்றிலும் கிழிஞ்ச சேலைகளை சுவரா கட்டி வச்சு மழை, வெயில், பனி, காத்துன்னு குழந்தைகளை காப்பாத்தி வச்சிருக்கேன்.

 

murugan


இப்ப மூத்த பொண்ணு கொத்தமங்கலம் அரசு பள்ளியில படிச்சு, பிளஸ் டூ வுல 404 மார்க் வாங்கி இருக்கு. மேல படிக்க வைக்க எந்த வசதியும் இல்லை. நடிகர் சூர்யாவின் அகரம் அறக்கட்டளைக்கு மனு போட்டிருக்கு. படிப்பு முடிச்சதும் வேலை கிடைச்சா மற்ற 2 குழந்தைகளின் படிப்புச் செலவை என் மூத்த பொண்ணு கவணிச்சுக்கும். ஆனா எப்படி கிடைக்கப் போகுதுன்னு தெரியல.
 

அ.தி.மு.க அறிவிச்ச அந்த ரூ 3 லட்சத்தை கொடுத்தாலாவது குழந்தைகளை படிக்க வைப்பேன். எதுவும் கிடைக்கல. அ.தி.மு.க - அம்மா-வுக்காக உயிரைக் கொடுத்தவர் குடும்பத்துக்கு அந்த கட்சி செஞ்சது ஒன்றுமே இல்ல” என்று கலங்கினார். குழந்தைகளின் படிப்புக்காக உதவிகள் கிடைத்தால் அது போதும் என்றார். அருகில் நின்ற குழந்தைகள் கண்கலங்கி நின்றனர். அதிகாரப் போட்டியில் இருக்கும் அ.தி.மு.க தலைமை இது போல ஜெயலலிதாவுக்காக உயிரை கொடுத்த உண்மை தொண்டர்களின் குடும்பம் பற்றி அறியவில்லையா? அறிந்தும் கண்டுகொள்ளவில்லையா? பொறுத்திருந்து பார்ப்போம்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்