Skip to main content

“இமாச்சல் பேரிடரில் சிக்கிய மாணவர்கள் பத்திரமாக மீட்பு” - அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்

Published on 12/07/2023 | Edited on 12/07/2023

 

Students caught in Himachal disaster safely rescued Minister KKSSR Ramachandran

 

வட மாநிலங்களில் பெய்து வரும் கனமழை காரணமாகப் பல்வேறு மாநிலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இமாச்சலப்பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், டெல்லி, காஷ்மீர் எனப் பல மாநிலங்களில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

 

இமாச்சலப்பிரதேசத்தின் குலு மலைப் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக இதுவரை 72 பேர் உயிரிழந்துள்ளதாக இமாச்சலப்பிரதேச அரசு தெரிவித்திருந்தது. 39 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்ட நிலையில் காணாமல் போனவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்றுக் கொண்டுள்ளதாகவும் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டு இருந்தது. மேலும் இமாச்சலப்பிரதேசம் மாநிலத்தில் தொடரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவால் சுற்றுலா சென்ற 12 தமிழக கல்லூரி மாணவர்கள், அமர்நாத் பனி லிங்க தரிசனத்திற்குச் சென்ற பக்தர்கள் கனமழையால் பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக இன்று காலை தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் வடமாநில பேரிடரில் சிக்கிய தமிழர்கள் பத்திரமாக மீட்கப்பட்டது குறித்தும் விரைவில் தமிழகம் திரும்ப உள்ளனர் எனத் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இது குறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இமாச்சலப்பிரதேசத்திற்கு சுற்றுலா சென்ற 12 கல்லூரி மாணவர்கள் அங்கு பெய்து வரும் கனமழை, வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு காரணமாகத் தமிழ்நாட்டிற்குத் திரும்ப முடியவில்லை என்ற தகவல் மாணவர்களின் பெற்றோர்களிடமிருந்து மாநில அவசரக்கால செயல்பாட்டு மையத்திற்கு நேற்று முன்தினம் கிடைக்கப் பெற்றதையடுத்து உடனடியாக இமாச்சலப்பிரதேச பேரிடர் மேலாண்மைத் துறை, இயக்குநர், குலு மற்றும் மண்டி ஆகிய மாவட்டங்களின் ஆட்சியர்களுடன் தொடர்பு கொள்ளப்பட்டு மாணவர்களின் நிலைமை குறித்து தமிழக அரசு சார்பில் விபரம் கேட்கப்பட்டது.

 

இமாச்சலப்பிரதேச பேரிடர் மேலாண்மைத் துறையினர், மிக கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாகப் போக்குவரத்து முற்றிலும் தடைப்பட்டது என்றும், சுற்றுலாப் பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக விடுதிகளில் தங்கவைக்கப்பட்டு உள்ளனர் என்றும், தொலைத்தொடர்பு மற்றும் மின்சார விநியோகம் முற்றிலும் தடைப்பட்டுள்ளதால் தொலைப்பேசியில் தொடர்புகொள்ள முடியவில்லை எனவும் நிலைமை சரியானவுடன் உடனடியாக தங்கள் ஊருக்குத் திரும்ப ஏற்பாடு செய்வதாகவும் தெரிவித்தனர். இதனிடையே இமாச்சலப்பிரதேச தலைமை காவல்துறை இயக்குநர் மூலமாக அனைத்து சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பாக இருப்பதாகத் தகவல் கிடைக்கப்பெற்றது. நேற்று மாலை 6 மணியளவில் போக்குவரத்து மீண்டும் துவங்கி உள்ளதாகவும், குலு மற்றும் மண்டி மாவட்டங்களில் இருந்து 4500 வாகனங்கள் சண்டிகருக்கு புறப்பட்டதாகவும் தகவல் கிடைக்கப்பெற்றது. நிலைமை சீரடைந்துள்ளதாகவும் மேற்கண்ட 12 கல்லூரி மாணவர்களும் நலமுடன் சண்டிகர் வந்துள்ளதாகவும் அவர்களின் பெற்றோர் மூலம் தகவல் பெறப்பட்டுள்ளது.

 

இன்று காலை தொலைக்காட்சி செய்தி மூலமாக அமர்நாத் பனி லிங்கம் தரிசிக்கச் சென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த பக்தர்கள் நிலச்சரிவு ஏற்பட்டதால் தமிழ்நாட்டுக்குத் திரும்பி வருவதற்கான பயணம் தடைப்பட்டுள்ளதாக அறியப்பட்டது. இது தொடர்பாக டெல்லி தேசிய பேரிடர் மீட்புப் படையின் காவல்துறை துணைத் தலைவர் அவர்களைத் தொடர்புகொண்டு விசாரிக்கப்பட்டது. கடந்த இரு தினங்களாக ஜம்முவிலிருந்து பஹல்காம் மற்றும் பல்டால் மார்க்கமாக அமர்நாத்திற்குச் செல்லும் வழிப்பாதை மூடப்பட்டு இருந்ததாகவும் தற்போது சரிசெய்யப்பட்டு மீண்டும் போக்குவரத்து தொடங்கி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த பயணிகளின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

 

மேலும் வட மாநிலத்தில் நிகழ்ந்து வரும் பேரிடரில் சிக்கியுள்ள தங்களது உறவினர்களை மீட்க நடவடிக்கை எடுக்கக் கோரி மாநில அவசரக்கால செயல்பாட்டு மையத்தில் இதுவரை 12 தொலைப்பேசி அழைப்புகள் பெறப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழிகாட்டுதலோடு வடமாநில பேரிடர் மேலாண்மை ஆணையங்களுடன் தொடர்புகொண்டு பயணத் தடையுள்ள தமிழர்களுக்கு உதவும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்