
புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு கிராமத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் படிக்கும் வெளியூர் பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவிகள் தங்கி படிக்க வசதியாக பள்ளியில் இருந்து 200 மீட்டர் தூரத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு விடுதி ஏற்படுத்தப்பட்டது. இந்த விடுதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் வரை சுமார் 50 மாணவிகள் தங்கி படித்து வந்தனர். ஆனால் கடந்த சில ஆண்டுகளில் மாணவிகளின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்த தற்போது மாணவிகளே இல்லாத விடுதி செயல்பட்டு வருவதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.
ஆனால் வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் மாணவிகள் சேர்க்கை விண்ணப்பங்கள் வாங்கப்படுகிறது. ஆனால் மாணவிகள் தான் தங்கவில்லை. கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை 2 மாணவிகள் தங்கி இருந்துள்ளனர். தற்போது அந்த 2 மாணவிகளும் தங்கவில்லை. ஆனால் வழக்கமாக சமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.
இது குறித்து அப்பகுதியினர் கூறும் போது.. இந்த விடுதியில் சுமார் 50 மாணவிகள் வரை தங்கி படித்தனர். அப்போது விடுதிக்குள்ளேயே ஆழ்குழாய் கிணறு அமைத்து தண்ணீர் தட்டுப்பாடின்றி இருந்தது. ஆனால் கடந்த சில ஆண்டுகளில் ஆழ்குழாய் கிணறு பழுதடைந்துவிட்டதால் தண்ணீர் பிரச்சனை அதிகமானது. விடுதி மாணவிகள் அருகில் உள்ள விவசாய ஆழ்குழாய் கிணறுகளுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. அதன் பிறகு வெளியில் இருந்து ஊராட்சி சார்பில் ஒரு குடிதண்ணீர் இணைப்பு வழங்கப்பட்டது. அதில் வரும் தண்ணீர் சமைப்பதற்கும், குடிப்பதற்கும் மட்டுமே பயன்படுத்த முடியும். ஆனால் மாணவிகள், குளிக்க துவைக்க முடியாமல் தவித்தனர். அதனால் விடுதியில் மாணவிகள் சேர்ந்து தங்குவதை நிறுத்திக் கொண்டனர். படிப்படியாக குறைந்து தற்போது 2 மாணவிகள் மட்டுமே தங்கி இருந்தனர். கடந்த சில நாட்களாக அந்த இரு மாணவிகளும் இல்லை. ஆனால் தினசரி சமையல் நடக்கிறது.
ஏழை மாணவிகள் தங்கி படிக்க வசதியாக விடுதிக்குள் ஆழ்குழாய் கிணறு அமைத்து தண்ணீர் பிரச்சனையை போக்கினால் மாணவிகள் தங்கி படிக்க வசதியாக இருக்கும் என்றனர்.